தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 2004 ம் ஆண்டு அது செயற்பட்ட அடிப்படையில் இருந்து விலகிச்சென்றதன் காரணமாகவே இந்த முடிவை தாம் கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்கொண்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தாம் விரைவில் அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் காணப்படும் பிரச்சினைகள், அந்த கூட்டணி கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் உண்மைகள் ஆகியவற்றை அம்பலப்படுத்தப்போவதாகவும் அதற்காக இன்று அல்லது நாளை விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை கூட்டவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கிவிட்டு புதியவர்களை இணைக்கும் முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்த கிஷோர், தான் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் வன்னியில் போட்டியிடவுள்ளதாக அடித்துக்கூறியுள்ளார்.
தன்னைப்போலவே, கூட்டமைப்பின் இன்னொரு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் கனகரட்ணமும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி இன்னமும் உத்தியோகபூர்வ தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை.
இப்பிழவின் பின்னணியில் இந்தியத் தலையீடு அமைந்திருக்கலாம் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் கருத்து வெளியிட்டன.