தம்புள்ளைப் பள்ளிவாசல் பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து சிறுபான்மையின மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களின் கலாசார, சமய விடயங்களில் கைவைக்கும் விடயமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் சுமார் 60 வருடங்களுக்கு முற்பட்ட பழைமைவாய்ந்தது. இந்த ஆலயம் கடந்த காலங்களில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதி அபிவிருத்தியைக் காரணம் காட்டி பிள்ளையார் மீது கைவைக்க முயற்சி எடுக்கப்படுகிறது.