ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரான பின்னர், கிழக்கு மாகாண அபிவிருத்தியில் தான் நேரடியாக தலையிட்டு, அபிவிருத்தியை துரிதப்படுத்தப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க தனக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அடுத்த மூன்று வாரங்களில் தமது கட்சியினருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் பெற்றுக் கொடுத்து, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள ரி.எம்.வீ.பீ கட்சி அலுவலங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகங்களாக மாற்றப் போவதாகவும் கருணா கூறியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் பெறுவது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தப்படுகிறது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் கல்வி கற்ற உயர்ந்த தராதரத்தினான மக்கள் வாழ்வதாகவும் அவர்களுடன் பணியாற்ற கல்வி கற்றவர்கள் இருக்க வேண்டும் எனவும் தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் கல்வியறிவில்லாத முட்டாள் எனவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.
அவருடன் இருப்பவர்களும் முட்டாள்கள். தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்த பின்னர் பிள்ளையானுடன் வெறும் 60 பேர் மாத்திரமே எஞ்சியிருப்பர் எனவும் ஏனைய அனைவரும் தன்னுடன் இருப்பதாகவும் கருணா கூறியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு பிள்ளையான் பொருத்தமற்றவர் என கருணா கூறியிருந்தார்.
இது குறித்து ஒரு மாதத்திற்குள் விளக்கமளிக்குமாறும் கருணாவை தற்காலிகமாக ரி.எம்.வீ.பீயின் அங்கத்துவத்தில் இருந்து விலக்கி வைப்பதாகவும் அந்த கட்சியின் அரசியல் குழு தெரிவித்திருந்தது. இது குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள கருணா, தனக்கு அறிவிக்கப்படாத விடயம் தொடர்பாக தான் எதனையும் கூற விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்