Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிள்ளையானுக்கு முடிசூட்டும் அரசின் கனவு : தகர்ந்து போனது

பிரித்தானிய அரசாங்கம் கருணாவை இலங்கைக்கு நாடு கடத்திய நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குள்ளும், அரசாங்கத்திற்குள்ளும் புதிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இணையம் ஒன்று தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.

கருணாவின் உதவியுடன் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டமை, மற்றும் கருணாவினால் தொடர்ந்தும் சிறுவர்கள் படையில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு சர்வதேச ரீதியில் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் இங்கிலாந்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அத்துடன் மோதல் நடைபெற்று வரும் சந்தர்ப்பத்தில் ஒரே நடவடிக்கைக்கா, ஒரே அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரிடம் உதவிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் கருணா பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா, விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டதுடன் பின்னர் பாதுகாப்பு படையினருக்கு உதவியமை பகிரங்கமான விடயமாகும்.

அத்துடன் அந்த காலகட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் பாரிய நிதி மோசடி இடத்பெற்றதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து கருணாவிற்கு அடுத்ததாக இருந்த பிள்ளையான் கட்சியின் முன்னணி நிலைக்கு உயர்ந்தார்.

இதனால் கருணாவிடம் உதவியை பெற்றுக் கொண்டவர்களுக்கு அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதை தவிர வேறு மாற்று வழிகள் இருக்கவில்லை. இறுதியில் அவர் போலி கடவூச்சீட்டின் மூலம் இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போலி கடவூச்சீட்டில் இங்கிலாந்து சென்ற கருணா அங்கு கைதுசெய்யப்பட்டு, அவருக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, தாக்கல் செய்யப்படும் வழக்கின் மூலம் கருணா, இங்கிலாந்தில் சிறைவைக்கப்படுவார் என அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தவர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர்.

கருணாவிற்கு எதிராக சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் அவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன், அவருக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமை அமைப்புகள் இங்கிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தன.

இறுதியில் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் சீர்குலைந்த நிலையில், தற்காலிக கடவூச்சீட்டின் மூலம் இங்கிலாந்து அரசாங்கம் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கைக்கு திருப்பி அனுப்பியது.

இதன் மூலம் கருணாவுக்கு குழி வெட்டியவர்கள், அந்த குழியிலேயே தற்போது விழுந்துள்ளனர்.கருணாவை கைவிட்டு, அந்த இடத்திற்கு பிள்ளையானை கொண்டு வந்து, பிள்ளையானை கிழக்கு மாகாணத்தில் அதிகாரமிக்கவராக உருவாக்குவதே அரசாங்கத்தின் தேவையாக இருந்தது. இந்த தேவை ஓரளவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிப்பதன் மூலம் இந்த தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த போதிலும், அவர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பிலேயே இருந்து வருகிறார்.

அதேபோல் இலங்கைக்கு திரும்பியுள்ள கருணாவும் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பிலேயே இருக்கிறார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவரையும் தற்போதைய தலைவரையும் பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தேவை தற்பொழுது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசாங்கத்தின் கிழக்கு மாகாண தலைவராக பிள்ளையானுக்கு முடிசூட்ட அரசாங்கம் மேற்கொண்ட திட்டம் பிழைத்து போயுள்ளதாக தெரிகிறது.

அதேபோல் கருணாவின் மீள்வருகையால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குள்ளும் புதிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன கருணா தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவராக இருப்பதும், அந்த பொறுப்பை பிள்ளையான் கைப்பற்றியிருப்பதுமே இந்த புதிய பிரச்சினைக்கான காரணம் என கூறப்படுகிறது.

இந்த பிரச்சினைகளை மறுத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் ஆசாத் மௌலானா.

கருணா தமது அமைப்பின் தலைவர் எனவும் பிள்ளையான் பிரதி தலைவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்கள் குறித்து தமது கட்சியின் அரசியல் பிரிவினர் விரைவில் கூடிய தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகவும் ஆசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருப்பினும், ஆங்கில ஊடக இதழ் ஒன்று செவ்வி அளித்திருந்த கருணா, அரசாங்கதில் உள்ள சிலர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சுமத்தியிருந்தார்.

Exit mobile version