16.11.2008.
அத்துருகிரிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் செயலாளர் குமாரசுவாமி நந்தகோபன் இந்திய றோ உளவுப் பிரிவின் முகவராக இருக்கலாம் என புலனாய்வுத் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நான்கு தினங்களுக்கு முன்னர் நந்தகோபன் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியிருந்ததாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
எனினும், பிள்ளையானிடம் அவர் இந்தியா செல்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
படுகொலை செய்யப்பட்ட நந்தகோபன் என்ன காரணத்திற்காக இரகசியமாக மலேசியா சென்றார் அவர் அங்கு யாரை சந்தித்தார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நந்தகோபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என கருணா தரப்பு குற்றம் சாட்டியிருந்த வேளையில், பிள்ளையான் அவரை தனது செயலாளாராக நியமித்திருந்தார்.
நந்தகோபன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக செயற்படவில்லை எனவும், அவர் விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் எனவும் கருணா தரப்பு தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.
கருணா லண்டன் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில், நந்தகோபன் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைய நந்தகோபன் இறக்கும் வரையில் தலைவர் பதவியை வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்புலத்திலேயே நந்தகோபன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படுகொலைச் சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என பிள்ளையான் வலியுறுத்தி வரும் அதேவேளை, இதனை விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர் என கருணா உறுதிபடக் கூறி வருகின்றார்.
இந்த படுகொலைச் சம்பவம் கட்சியில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை மேலும் மோசமடையச் செய்யக்கூடும் என அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
globaltamilnews.com