Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரேம்குமார் குணரட்னத்தை சட்டரீதியாக கையாளுங்கள் – தாயார் கோரிக்கை

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் தோழர் பிரேம்குமார் குணரட்னம் ஏதேனும் தவறு செய்திருந்தால் சட்டரீதியாக அவரை கையாளுமாறும் அவர் அப்பாவி எனில் அவரை விடுதலை செய்யுமாறும் தோழர் குணரட்னத்தின் தாயார் திருமதி டி.ஆர். குணரட்னம் அதிகாரிகளை கோரியுள்ளார்.
தனது மகன் இனந்தெரியாத குழுவொன்றினால் சட்டவிரோதமாக
கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் தாயார் டி.ஆர்.குணரட்னம் தெரிவித்தார்.
தனது மகனின் அரசியல் தொடர்புகள் குறித்து தனக்கு தெரியாதெனவும் ஆனால் தனது மூத்த மகனின் கதி தோழர் பிரேம்குமார் குணரட்னத்திற்கும் ஏற்படலாம் என அஞ்சியதாகவும் அவர் கூறினார். டி.ஆர். குணரட்னத்தின் மூத்த மகனான தோழர் ரஞ்சிதம் குணரட்னம்1987-89காலப்பகுதியில் ஜே.வி.பியின் தீவிர செயற்பாட்டாளராக இருந்தவர். அவர், அக்காலத்தில் ஜே.வி.பியின் கிளர்ச்சியை அடக்குவதில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினரால் கடத்தி, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை தனது சகோதரனை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு சர்வதேச சமூகத்திடம் தோழர் பிரேம்குமார் குணரட்னத்தின் சகோதரி, நிரஞ்சலி குணரட்னம் கோரியுள்ளார்.
தனது சகோதரனின் அரசியல் செயற்பாடுகள் குறித்து தான் அறிந்திருந்தாகவும் ஆனால் அவர், சமூக அரசியல் மாற்றத்திற்கூடாக அனைத்து இலங்கையர்களுக்குமான சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கே அவர் ஆர்வம் கொண்டிருந்ததாகவும் நிரஞ்சலி தெரிவித்தார்.
இதேவேளை மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சமீர கொஸ்வத்த கருத்துத் தெரிவிக்கையில்,தோழர் பிரேம்குமார் குணரட்னம் பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக அவரை பகிரங்கப்படுத்தாமல் இருப்பதற்கு தமது அமைப்பு முன்னர் தீர்மானித்திருந்ததாக கூறினார்.
இந்த அச்சம் இப்போது உண்மையாகிவிட்டது. எனவும் இதன் காரணமாகவே ஏப்ரல் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள முன்னிலை சோஷலிசக் கட்சியின் முதலாவது மாநாட்டில் தோழர் பிரேம்குமார் குணரட்னம் பங்குபற்றாதிருக்கக்கூடும் எனத் தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறினார். எனினும் இம் மாநாடு திட்டமிட்டபடி நாளை காலை 10.00 மணிக்கு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

Exit mobile version