Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரேமகுமார் – திமுது ஆட்டிகல கடத்தல் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்! : சி.கா.செந்திவேல்

ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறி தனிக்கட்சி அமைப்பதில் ஈடுபட்டிருந்த அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த பிரேமகுமார் குணரட்ணம், திமுது ஆட்டிகல ஆகிய இருவரும் கடந்த ஆறாம் திகதி இரவு வௌ;வேறு இடங்களில் வைத்துக் கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளனர்.

இச்சம்பவத்தைப் புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியின் அரசியல் குழு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அதேவேளை இக்கடத்தலும் காணாமல் போயுள்ளமையும் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவும் கட்சி சுட்டிக் காட்டுகிறது.

மேலும் அவ் அறிக்கையில், நாட்டில் திட்டமிட்ட ஆட்கடத்தல்களும் காணாமல் போகின்றமையும் நீண்டகாலமாகவே தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிகழ்வுகளாகும். குறிப்பாகப் போர்க்காலங்களிலும் அதன் முடிவுக்குப் பின்பும் எவ்வித குறைவுமின்றி நாடு முழுவதும் குறிப்பாக மாற்றுக் கருத்துக்கள் உடையோர் கடத்தப்படுவதும் காணாமல் போவதும் தொடர்ச்சியாகவே திட்டமிட்ட வகையில் இடம்பெற்று வந்துள்ளன.

இவை பற்றிய முறைப்பாடுகளும் கண்டனங்களும் அண்மைய ஜெனிவா மனித உரிமைப் பேரவை வரை சென்று சர்வதேச அளவில் எதிரொலித்து நின்றமையைக் காண முடிந்தது. அத்துடன் இதுவரை கடத்தப்பட்டுக் காணாமல் போனோர் பற்றிய சுயாதீன விசாரணையை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச அரங்கில் வற்புறுத்தப்படுகின்றது. கருத்துச் சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம், அமைப்பு உருவாக்கும் உரிமை என்பன அரசியலமைப்பில் தாராளமாகவே பொறிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை மாற்றுக் கருத்துடையோர் ஒன்றுகூடி புதிய கட்சியாக முன்னிலை சோஷலிசக் கட்சியை அமைக்க முயற்சி செய்தபோதே அதன் முன்நிலையாளர்களான பிரமேகுமார் குணரட்ணமும், திமுது ஆட்டிகலவும் கடத்தப்பட்டுக் காணாமல் போய் உள்ளமை அதிர்ச்சிக்கும் கண்டனத்திற்கும் உரியதாகும். ஏற்கனவே இதே அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த லலித் வீரராஜ், குகன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு நான்கு மாதங்களாகியும் விடுவிக்கப்படவோ தகவல் வெளிப்படுத்தப்படவோ இல்லை எனவே ஜே.வி.யில் இருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள் தமக்கென ஒரு புதிய கட்சியை உருவாக்குவது ஜனநாயகத்திற்கு உட்பட்டதும் சட்டபூர்வமானதுமாகும். அதனைத் தடுக்க இவ்வாறு கடத்தலில் ஈடுபடுவது பாசிசப் போக்கின் வெளிப்பாடாகும். ஆதலால் அவர்கள் நால்வரும் உடன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகிறது.

சி.கா.செந்திவேல்
பொதுச்செயலாளர்

Exit mobile version