23.10.2008.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செய்லாளர் வைகோவும், அக் கட்சியின் அவைத்தலைவர் மு.கண்ணப்பனும், நாட்டின் பிரிவினையைத்தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இன்று கைது செய்யப்பட்டனர்.
வைகோ சென்னையில் அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிபதி ரவி அவரை எதிர்வரும் நவம்பர் 6ஆம் நாள் வரை நீதிமன்றக்காவலுக்கு அனுப்பிவைத்து உத்திரவிட்டார். பின்னர் வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கண்ணப்பன் கோவை அருகே உள்ள அவரது சொந்த கிராமத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவருமே இந்திய குற்றவியல் சட்டம் 124-ஏ, தேசத் துரோகம், மற்றும் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் பிரிவு 13 1 பி ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் புரிந்தார்கள் என காவல்துறையின் முதல் தகவலறிக்கை கூறுகிறது.
கருத்தரங்கம்
கடந்த செவ்வாயன்று சென்னையில் மதிமுக ஏற்பாடு செய்திருந்த, இலங்கையில் நடப்பது என்ன என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியபோது வைகோவும் கண்ணப்பனும் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவே இருவர்மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இப்பேச்சுக்களின் பின்னணியில், மற்றும் அண்மையில் ராமேஸ்வரத்தில் நடந்த திரைப்படக் கலைஞர்கள் பேரணியின்போது தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அ இ அ தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமையன்று ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் பொடா சட்டம் இல்லாத காரணத்தினால்தான் இப்படிப் பேசுகின்றனர், தான் ஆட்சியிலிருந்தால் அப்படிப்பேசுவோர் கைதுசெய்யப்பட்ட்டிருப்பார்கள் என்றும், விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத்துரோகிகள் என்றும் அவர் கூறியிருந்தார்.
மதிமுக இன்னமும் அ தி மு கவின் கூட்டணியில் தான் உள்ளது. அண்மையில் ஜெயலலலிதாவே தமிழக அரசு இலங்கைத்தமிழர்களுக்கு போதிய உதவி செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் பின்னர் அவர் தனது ஆதரவு இலங்கைத்தமிழருக்குத்தான், விடுதலைப்புலிகளுக்கல்ல என்றார்.