அதே வேளை பிரித்தானியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது எனவும் டேவிட் கமரன் அரசு அறிவித்துள்ளது. 0.7 வீதத்தால் அதிகரித்துள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியை அறுவடை செய்திருப்பவர்கள் அந்த நாட்டின் முதல் 50 பெரிய பணக்காரர்களே என்பது அவரகளின் வருமான அதிகரிப்பிலிருந்து தெரியவருகிறது.
பல்தேசிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட சலுகைகள், தொழிலாளர்கள் மீதான கட்டற்ற ஒடுக்குமுறைகளை அவர்கள் கட்டவிழ்த்துவிட வசதியேற்படுத்தியிருக்கிறது.
பகுதி நேரமாகவும், குறைந்த கூலிக்கும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் வியாபார நிறுவனங்களால் மன உழைச்சல் போன்றவற்றிற்கு தொழிலாளர்கள் உள்ள்வதாக பிரித்தானிய தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவிக்கிறது.
வீங்கிப் பெருத்துள்ள பில்லியன்களை வருமானமாகக் கொண்ட பல்தேசிய நிறுவனங்களால் சிறிய மற்றும் மத்தியதர வியாபாரங்கள் மூடுவிழாக்களை நடத்துகின்றன.
பிரித்தானியாவில் 2.34 மில்லியன் வேலையற்றோருடன் தாமும் சேர்க்கப்படலாம் என்ற அச்சத்தில் தொழிலாலர்களை வைத்திருக்கிறது பிரித்தானிய அதிகாரவர்க்கம்.
முதலாளித்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு இலாபத்தை அதிகரித்தல் என்பதாகும். இலாபத்தைத் தொடர்ச்சியாக அதிகரிப்பதற்கு வழிசெய்யும் அரசுகள் மக்களிடமிருக்கும் எஞ்சியுள்ள பணத்தையும் பறித்து முதலாளிகளிடம் சேர்ப்பிக்க வழிசெய்து கொடுக்கிறது.
உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் அவலத்திற்கு உள்ளாக்குவதற்கு ஊடாகவே முதலாளித்துவத்தை இன்னும் சில காலங்க்களுக்கு உயிர்வாழ வகை செய்யலாம் என்ற தவிர்க்க முடியாத நிலைக்கு அரசுகள் சென்றடைந்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் இலங்கை இந்தியா போலன்றி போராடப் பழக்கப்பட்ட கலாச்சாரம் நிலவுகின்றது.
இவ்வகையான கலாச்சாரம் மாற்றம் அறுபதுகளில் ஏற்பட்டிருந்தது. தேசிய வெறி, நாஸிக் கோட்பாடுகள் போன்றன நேரடியாகச் சமூகத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஆக்கிரமிக்க முடியாத முன்னேறிய பகுதி ஒன்றை ஐரோப்பாவில் காணலாம். இன்று வரையும் ஐரோப்பிய அரசுகளிடமிருந்து உரிமைகளைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் இந்த முன்னேறிய பிரிவினர் மத்தியிலிருந்து அரசியல் தலைமை தோன்றுவதைத் தடுப்பதற்காகவே மக்களை உளவுபார்க்கும் நவீன வடிவங்களை இந்த அரசுகள் கையாள்கின்றன.