புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக லண்டனில் இந்த இரண்டு அமைப்புக்களும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை 2009 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் ஒழுங்கு செய்து நடத்தி வந்துள்ளன. இலங்கை இனக்கொலை அரசுக்கு எதிரான உணர்வைக் கொண்டுள்ள மக்கள் ஆயிரமாயிரமாய் திரண்டு இப் போராட்டங்களில் பங்காற்றி வந்தனர். சிக்கலான பல்வேறு துயரங்களும், வாழ்வின் அவலங்களும் நிறைந்த புலம்பெயர் வாழ்க்கைச் சூழலிலும் மக்கள் தமது உணர்வை வெளிக்காட்டும் நோக்கோடு இப் போராட்டங்களில் பங்கெடுத்து வந்துள்ளனர்.
போராட்டங்களை ஒழுங்கமைத்துத் தலைமை தாங்கும் இக் குழுக்களிடம் தெளிவான எந்த அரசியல் வேலைத்திட்டமும் இல்லை. புலம் பெயர் நாட்டிலேயே தமிழர்கள் எதிர்கொள்ளும் நாளாந்த வாழ்வின் அவலங்கள், கலாச்சார ஆக்கிரமிப்பு, அகதிகள் பிரச்சனை உட்பட எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளும் குறிப்பான வேலைத்திட்டங்கள் இவர்களிடம் இல்லை.
இலங்கையில் நடைபெற்ற ஜூலை இனப்படுகொலை ஈறாக வன்னி இனப்படுகொலை வரை இலங்கை அரசின் பின்புலத்தில் செயற்பட்ட பிரித்தானிய அரசிற்கு எதிராக துரும்பைக்கூட இந்த அமைப்புக்கள் நகர்த்த முன்வந்ததில்லை. தவிர, வெற்றுக் கடதாசி அமைப்பான நாடுகடந்த தமிழீழம் அறிக்கை அமைப்பாக மாறிவிட்டது.
பிழைப்புவாதத்தை மட்டுமே தமது நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்புக்கள் மக்களின் உணர்வை மதித்ததில்லை மாறாக அவர்களை விரக்திக்கு உள்ளாக்கி போராட்டங்களிலிருந்து அன்னியப்படுத்தினர்.
அவ்வாறு அன்னியப்படுத்தப்பட்ட மக்கள் லைக்கா, லிபாரா போன்ற பல்தேசிய வியாபாரக் கம்பனிகள் கட்டவிழ்த்துவிடும் கலாச்சாரத் சிதைப்பில் நயவஞ்சகத்தனமாக முழ்கடிகடிக்கபட்டனர். தென்னிந்திய சினிமாவினதும் தொலைக்காட்சிகளதும் முகவர்களான பணவெறியர்கள் முழு புலம்பெயர் சமூகத்தின் போராட்ட உணர்வைச் சிதைத்துச் சீர்குலைத்து மாய உலகத்திற்கு இழுத்துச் சென்றனர்.
பிழைப்பு வாதப் புலம்பெயர் அமைப்புக்கள் இவை குறித்துத் துயர் கொண்டதில்லை. போட்டி வியாபாரக் குழுக்களோடு தம்மை அடையாளப்படுத்தி தமது பங்கிற்குப் பணம் திரட்டிக்கொண்டனர்.
இவ்வாறு பிழைப்புவாதிகளதும் வியாபாரிகளதும் கைகளில் சிதைக்கப்படும் சமூகங்கள் கலந்துகொண்ட இரண்டு போராட்டங்களிலும் எதிர்பார்த்த மக்கள் தொகையினர் கலந்து கொள்ளவில்லை. இலட்சம் இலட்சமாகக் கலந்து கொண்ட மக்கள் ஆயிரமாயிரம் ஆயினர். இன்று நூறுகளில் வந்து நிற்கின்றது.
மக்களிடம் இன்னும் போராட்ட உணர்வு முற்றாக அழிக்கப்படவில்லை. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் புலம்பெயர் கூறுகளான தமிழர்கள் மத்தியில் மக்கள் சார்ந்த வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். உண்மைகளை மக்களிடமிருந்து மறைக்காமல் மக்கள் பற்றோடு விவாதங்கள் ஊடாக அரசியல் திட்டம் முன்வைக்கப்பட்டு அதனை நோக்கி மக்கள் அணிதிரட்டப்பட்டால் எழுச்சிகளும் மாற்றங்களும் சாத்தியமே!