இதில் இன்னொரு படி மேலே சென்றுள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களும் இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. உலகில் அழிக்கப்பட்ட மக்கள் தொகுதி ஒன்றின் பிரதிநிதிகளாக தம்மை வரித்துகொண்ட அமைப்புக்களில் இந்த அளவு முட்டாள் தனமான கோரிக்கை ஒன்றை வேறு எந்த அமைப்பும் முன்வைத்திருக்க முடியாது.
‘கனடா வாழ் தமிழ் மக்களும், அரசாங்கமும் பொருத்தமான முடிவை எடுத்துள்ளனர். நாமும் ஓரணியில் திரண்டு உறுதியான செயற்பாடுகளை ஒன்றிணைந்து முன்னெடுப்போமாயின்,
1) பொது நலவாய நாடுகளின் மாநாடு ஸ்ரீலங்காவில் நடைபெறுமிடத்து சில பொதுநலவாய உறுப்புரிமை நாடுகள் அதனை புறக்கணிக்கவைக்க முடியும்.
2) பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களும் ஸ்ரீலங்காவை புறக்கணிக்க வைக்க முடியும்.
3) உச்ச பட்சமாக பொதுநலவாய கட்டமைப்பிலிருந்து ஸ்ரீலங்காவை தடுத்து வைப்பதும் சாத்தியமே.’
என அந்த அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கொங்கோவில் ஆயுதக் குழுக்களை தோற்றுவித்து அவற்றின் அழிவில் கொம்ப்யூட்டர் மற்றும் மின்னியல் பொருட்களை உற்பத்தி செய்வதற்குரிய கனிமங்களைப் பெற்றுக்கொள்ளும் பல்தேசிய நிறுவனங்களை, அரபு நாடுகளில் அப்பாவிக் குழந்தைக்களை வியாபாரத்திற்காக கொன்று போடும் பல்தேசிய முதலீடாளர்களை, ஆசிய நாடுகளில் குழந்தைகளையும் பெண்களையும் எரித்தே கொல்லும் இவர்களை, இலங்கையிலும் உலகம் முழுவதும் இனக்கொலைக்குத் துணைபோன இரத்தக் காட்டேரிகளை இலங்கையைப் புறக்கணிக்குமாறு கேட்கிறது பிரித்தானியத் தமிழர் பேரவை.
இவர்களும் மனிதாபிமான அடிப்படையில் இலங்கையைப் புறக்கணித்துவிடுவார்கள் என்று மக்களுக்கு போலி நம்பிக்கயைக் கொடுக்கிறது இந்த அமைப்பு. இதற்காக மக்களை தெருவில் இறங்கி மண்டியிடுமாறு அழைக்கிறது.
இவ்வாறு அழிப்பவர்களையே காப்பாற்ற அழைக்கும் அழிவு அரசியல் மட்டும் தான் இன்று விக்கியையும் பேரவை போன்ற புலம் பெயர் அமைப்புக்களையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது.
இலங்கையில் மொத்த முஸ்லிம்களும் ராஜபக்ச பாசிசத்தின் அழிப்பிற்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மலையகத் தமிழர்கள் ஒரு நேர உணவிற்கே கையேந்தும் நிலை தோன்றியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் நெருப்பெரியும் மனங்களோடு தான் மக்கள் வாழ்வதாகத் தேர்தலில் கூட அறிவித்திருக்கிறார்கள். சிங்கள மக்கள் தமது உரிமைகளைக் கேட்கும் போதெல்லாம் ராஜபக்ச அதிகாரத்தால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.
இவ்வாறு பெரும்பான்மை மக்களால் வெறுக்கப்படும் ராஜபக்ச அரசை அதன் எதிரிகளை ஒருங்கிணைப்பதால் மட்டுமே அழிக்க முடியும். அவர்கள் ஒருங்கிணைவதும் ராஜபக்ச அரசிற்கு எதிராகப் போராடுவதும் பெரும்பாலான பிழைப்புவாதிகளுக்கு அச்சமூட்டுகிறது. இந்த நிலையில் ராஜபக்ச அரசிற்கு எதிராக இவர்களை ஒருங்கிணைக்கும் அரசியல் முன்வைக்கப்பட வேண்டும். ஒடுக்கப்படும் இவர்களை நோக்கியே நல்லிணக்கத்திற்கான நேசக்கரம் நீட்டப்பட வேண்டும். அதற்கு மாறாக பல்தேசிய நிறுவனங்களை இரைஞ்சும் அதிகாரவர்க்க அரசியல் அழிவுகளின் நீட்சியே.