Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானிய அரச அறிக்கை : மகிந்த அரசு விசனம்

பிரிட்டிஷ் அமைச்சர் நேற்று முன்தினம் வெளியிட்ட விசேட வீடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நிராகரித்த அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து ஈட்டிக்கொண்ட வெற்றியை பிரிட்டன் புறக்கணிக்க முயற்சி செய்வதாக தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரம்புக்வெல்ல இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:

“பிரிட்டன் பாரபட்சம் காண்பிக்கிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட காலநேரம் பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது. பரிட்டன் மிக நீண்ட காலமாக இலங்கையின் மனித உரிமை பேணல் பற்றி மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் வெற்றியை ஒடுக்குவதற்காகவே அவர்கள் இவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அமைச்சர் மிலிபான்டின் அறிக்கைக்கு விசேட அரசாங்க தூதுக்குழு ஒன்று விரைவில் பதிலளிக்கும் இவ்வாறு அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் மிலிபான்ட் விசேட வீடியோ அறிக்கையில் தெரிவித்ததாவது:

“இலங்கை அரசாங்கத்திடமிருந்து பதில் பெற்றுக் கொள்வதற்கென மூன்று முக்கிய விடயங்களை நான் இனம்கண்டுள்ளேன். கடந்த மாதம் லண்டனில் நான் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய உலக தமிழர் பேரவை மகாநாட்டிலும் இந்த முக்கிய விடயங்களை முன்வைத்தேன்.

உலகத் தமிழர் பேரவையில் கலந்து கொண்டவர்களின் கவனத்திற்கு நான் முன்வைத்த அதே செய்தியை நான் உங்கள் கவனத்திற்கும் கொண்டு வருகிறேன். இந்த நவீன உலகில் பார்வையாளர்களுக்கு முரண்பாடற்ற செய்திகளை நாம் முன்வைப்பது மிகமிக முக்கியமாகும்.

இலங்கையில் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயம் வன்செயலை ஒழித்தலாகும். பொருளாதார, சமூக மாற்றங்கள் வன்முறை மூலம் அன்றி அரசியல் மூலமே ஏற்படுத்தப்படுகின்றன. இலங்கையில் எந்த சமூகத்தினருக்கும் வன்முறை உதவமாட்டாது.

இரண்டாவது முன்னுரிமை, சகல இலங்கையர்களுக்கும் சம அடிப்படையில் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகள் கிடைக்க வேண்டும். அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் அதன் பின்னரும் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் இலங்கையில் ஊடக சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் குறித்தும் உங்களில் பலர் கவலை கொண்டிருக்கலாம்.

ஒரு ஆரோக்கியமான ஜனநாயகம் தேர்தல்கள் மூலம் மட்டும் ஏற்படுவதில்லை. சுதந்திரமான சமுதாயத்தில் சுயாதீனமான நீதிசேவை மூலமே ஆரோக்கியமான ஜனநாயகம் மலர்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வது மிக முக்கியமாகும்.

இலங்கை அங்கீகரிக்க வேண்டிய இரண்டாவது தொகுதி உரிமைகள் என்னவென்றால், சகல இலங்கை குடிமக்களுக்கும் சம உரிமைகளை கொடுக்கும் வகையில் அரசியல்யாப்பு விதிமுறைகளை சீரமைப்பதாகும். எந்தவொரு நாட்டிலும் இது ஒரு சவால் விடுக்கும் பிரச்சினையாகும்.

ஆனால் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதித்து நடப்பது ஒரு நாகரிகமான சமுதாயத்திற்கு இருக்கவேண்டிய அத்தியாவசிய பண்புகளில் ஒன்றாகும்.”எனத் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை நிறுத்தியது பற்றி குறிப்பிடுகையில், “ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் வெளிப்படையான வர்த்தக உறவுகளை பேணவே விரும்புகிறது என்று கூறினார். ஆனால், ஐரோப்பிய ஆணைக்குழு எழுப்பிய மனித உரிமை பேணல் விடயங்கள் குறித்து திருப்திகரமான பதிலளிக்காதமையே வரிச்சலுகையை இடைநிறுத்துவதற்கு காரணமாக இருந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version