Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியாவை ஏற்கமுடியாது : இலங்கை

இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஆராய்வதுடன், இங்கு நிலவும் மனித அவலங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான தேஸ் பிறவுணை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண் நேற்று நியமித்திருந்தார்.

இவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசு இன்று காலை அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம வெளியிட்டுள்ளார். இந்த நியமனத்தை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சரவைக் குழுவிடம் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண் தெரிவிக்கையில், “இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக செயற்படுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளரான தேஸ் பிறவுணை நான் கேட்டுள்ளேன். இலங்கை விவகாரங்களில் கவனம் செலுத்தி, அங்கு ஒரு அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஏதுவான சூழல் குறித்து ஆராயுமாறும், அங்கு தற்போது மோசமடைந்து செல்லும் மனித அவலம் குறித்து கவனிக்குமாறும் அவரைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தி, அரசியல் தீர்வை முயற்சிக்காத வரையில், அங்கு முன்னர் நிலவிய படு மோசமான நிலைமைக்கே நாடு செல்லும் என்பதை நான் அழுத்தமாகச் சொல்ல விரும்புகின்றேன்.

டேஸ் பிறவுண், இலங்கையிலுள்ள அரச தரப்பு பிரதிநிதிகள், வெளிநாட்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட, வெளிநாட்டு பிரதிநிதிகளுடனும், அங்கு வாழும் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி, சுமுக சூழலுக்கான வாய்ப்புக்களை ஆராய்வார்” என்றார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரான தேஸ் பிறவுண், கடந்த ஒக்டோபரில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவி மாற்றங்களின்போது பதவி இழந்தவர். ஸ்கொட்லாந்து பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியேற்றபோது, அந்நிகழ்வில் கலந்துகொள்வதற்குப் பிரத்தியேகமாக இங்கிலாந்தில் இருந்து அழைக்கப்பட்ட ஒரு சில முக்கிய நபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version