
பிரித்தானியாவில் தொழிலாளர் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் அதிக உரிமை வழங்கும் இந்தச் சட்டத்திருத்தம் தொழிலார்களை அதிகமாகச் சுரண்டுவதற்கும், துன்புறுத்துவதற்கும், பயமுறுத்துவதற்கு வழிவகுக்கும் என பெண் ஆசிரியர்களுக்கான தேசிய ஆசிரியர் சங்கத்கின் பொதுச் செயலாளர் கிரிஸ் கேட் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்வதை இலகுபடுத்தும் இந்தச் சட்டமூலம் தொழிலதிபர்கள் தமக்கு உகந்த தொழிலாளர்களைத் தெரிந்தெடுக்க வழிவகுக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டு அவர்கள் அடிமையாக்கப்படுகின்றனர். சமூக நல அரசுகளாகக் கருதப்பட்ட ஐரோப்பிய அரசுகள் தொழிலாளர்களை ஒடுக்கும் அத்தனை ஆயுதங்களையும் தயார்செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டன. ஒரு புறத்தில் உலகம் முழுவதும் போர்ப் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள இந்த அரசுகள் முன்னெப்போதும் இல்லாதவாறு உள் நாட்டுத் தொழிலாளர்கள் மீது தமது ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளன.