அமரிக்காவில் உருவாகியுள்ள முதலாளித்துவ எதிர்ப்பு எழுச்சி ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவடைய ஆரம்பித்துள்ளது. பிரித்தானியாவில் செயின்ட் போல் தேவாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல நாட்களாக எதிர்ப்புப் போராட்டங்களை முகாமிட்டு நடத்தி வருகின்றனர். பிரித்தானிய பொலீசார் இவர்களைப் பலவந்தமாக வெளியேற்ற நீதி மன்ற உத்தரவைக் கோரியுள்ளனர். எதிர்வரும் புதிய நிதியாண்டில் பற்றாக்குறையும் பணவீக்கமும் பிரித்தானியாவில் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மக்களின் சமூக உதவித் தொகைகளை சிறிது சிறிதாக அழித்து வரும் பிரித்தானிய அரசின் நடவடிக்கையின் எதிரொலியாக வறிய மக்களின் தொகையும் வேலையின்மையும் அதிகரித்துள்ளது. பிரித்தானிய அரசு இந்த வருட முடிவிற்குள் சில வங்கிகளுக்குப் பணம் வழங்கி அவற்றை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றும் என எதிர்வு கூறப்படுகிறது.
இதே வேளை நேற்று வெளியான பாடசாலைகளின் தர நிர்ணய அறிக்கையில் பல பெற்றோர் குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியாமல் பட்டினியாகவே பாடசாலைகளுக்கு அனுப்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியப் பெருமுதலாளிகளின் வருவாய் கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிகமாகியுள்ளது.
உண்மை நிலையை உணர்ந்துள்ள மக்கள் போராட்டங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
இன்றைய தினம், பிரிக்டன், பிரிஸ்டல், பாத், பிடட் போர்ட், பேர்மிங்காம், கிளாஸ்கோ ஆகிய நகரங்களில் ஒரே நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.