பிரிட்டனில் வாழ்வதற்குரிய நடைமுறை விஷயங்களில் செலுத்தப்பட்ட கவனத்தைக் குறைத்துக்கொண்டு பிரிட்டனின் சரித்திரம் மற்றும் சாதனைகள் தொடர்பில் அதிக தகவலறிவு தேவை என்பது போன்ற மாற்றங்களை இப்பரீட்சையில் கொண்டுவர திட்டமிடப்படுகிறது.
பிரபல ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர், நெப்போலியனை போரில் வென்ற டியூக் ஆஃப் வெலிங்டன், கவிஞர் பைரன் போன்றோர் பற்றி பிரித்தானியப் பிரஜையாக விரும்பும் வெளிநாட்டினர் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
டிரஃபால்கர் உட்பட பிரிட்டனின் சரித்திரத்தில் இடம்பெற்ற முக்கிய யுத்தங்கள், பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் செய்த முக்கிய கண்டுபிடிப்புகள், கலை மற்றும் இலக்கியத்றையில் முக்கியப் பங்களிப்பு ஆற்றியவர்கள் ஆகியோர் பற்றி இந்தப் பரீட்சையில் கேள்விகள் கேட்கப்படும்.
இந்த பரீட்சை 2005ஆம் ஆண்டு தொழிற்கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இதுவரையில் இருந்து வந்த பரீட்சையில், பிரித்தானியப் பிரஜைகளுக்கு எவ்விதமான அரசாங்கச் சலுகைகள் உள்ளன, எவ்விதமான மனித உரிமைகள் உள்ளன என்பதுபோன்ற விஷயங்களில் அதிக கேள்விகள் கேட்கப்பட்டன.
தற்போது வரக்கூடிய பரீட்சை எழுதுவதற்கு பிரிட்டிஷ் தேசிய கீதத்தின் முதல் அத்தியாயமும் தெரிந்திருக்க வேண்டும்.
45 நிமிடங்கள் நடக்கக்கூடிய இந்தப் பரீட்சையை ஐக்கிய ராஜ்ஜியத்தில் தொண்ணூறு மையங்களில் எழுதலாம்.
புதிய பாடத்திட்டத்துடன் கூடிய பரீட்சை ஆயத்த புத்தகம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.