Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்குப் பகிரங்க வேண்டுகோள்!:யாழ்.பல்கலைக் கழகம் அழிக்கப்படுகிறது

jaffna_uni_poster‘யாழ்.பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத்தை வளர்க்க முற்படுவோர் தண்டிக்கப்படுவர், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அப்பயங்கரவாதத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினூடாக முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு முயற்சி செய்யும் தேச விரோத சக்திகளை இனம் கண்டுள்ளோம்.இவர்களுக்கு இறுதி எச்சரிக்கையாகும்.’ எனக் கூறும் சுவரொட்டிகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்திலும் அதன் சுற்றாடலிலும் ஒட்டப்பட்டுள்ளன.

‘எனது சொற்படி கேட்டு செயற்படாவிட்டால் எமது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும்’ என யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி உதயபெரேரா யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களைக் கண்டு அஞ்சும் அரச பயங்கரவாதிகள் இராணுவ பலத்தைக் கொண்டு அப்பாவி மக்களை ஒடுக்க முற்படுகின்றனர். தனது பொருளாதாரக் கொள்ளையை மூடிமறைப்பதற்காக சிறுப்பான்மைத் தேசிய இனங்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கும் இலங்கை அரச பாசிஸ்டுக்களின் பயங்கரவாதத் தலைவன் மகிந்த ராஜபக்ச உயர்கல்வியை அழிப்பதற்கு திட்டமிட்டு வருவது தெரிகிறது.

முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூர முற்பட்டமை, அச்சுறுத்தல்களுக்கு எதிரான வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டமை போன்ற செயற்பாடுகளை முடக்கும் வகையிலேயே இச் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தமிழ்ப் பேசும் மக்கள் பரந்திருந்தும் மகிந்த ராஜபக்சவின் பயங்கரவாத அரசு மாணவர்களையும் ஆசிரியர்களையும் அச்சுறுத்தும் இந்தச் செயற்பாட்டை உலக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல எந்த அமைப்பும் முன்வரவில்லை.

கொடிபிடிப்பதா இல்லையா என்ற கேலிக்கூதாடும் தமிழர் மத அடிப்படை வாதிகள் போன்று கூச்சலிடும் போலித் தேசிய வாதிகளும் மகிந்த அரச பயங்கரவாத்திற்கு எதிராகப் போராட முன்வர மாட்டார்கள்.

போர் ஆரம்பித்த நாளிலிருந்து இந்தியா வருகிறது, அமெரிக்கா தயாராகிவிட்டது, ஐ,நா துக்குக் கயிற்றோடு அலைகிறது என்று மக்களை ஏமாற்றும் ‘தேசிய வியாபாரிகள்’ தமிழ்ப் பேசும் மக்களின் உயர் கல்வி அழிக்கப்படுவது குறித்து துயர் கொள்வதில்லை.

பிரித்தானியாவிலுள்ள பிரதான பல்கலைக் கழகங்களில் தமிழ் மாணவர் அமைப்புக்கள் காணப்படுகின்றன. லைக்கா நிறுவனம் வழங்கும் வருடாந்தப் பணத்தில் குத்தாட்ட நிகழ்வுகளை நடத்தும் இக்குழுக்கள் மத்தியில்ருந்த சமூக அக்கறை சிதைக்கபட்டு வருகின்றது.

பிரித்தானியாவில் தேசியம் வளர்த்து தீமூட்டுவதாக தமிழ் அமைப்புக்கள் கூறிவருகின்றன. அவ்வப்போது நினைவு தினங்களையும், விழக்களையும் பெரும் பணச் செலவில் நடத்துவதே இவர்களின் உயர்ந்தபட்ச நடவடிக்கை. தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் உலக மயப்படுபத்தப்படுவதை இவர்கள் விரும்பவில்லை.

களியாட்டங்களை நோக்கித் திசை திருப்பப்படும் பல்கலைக் கழக தமிழ் மாணவர் அமைப்புக்களை யாழ், பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை நடத்துமாறு ஏன் இந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுக்கக் கூடாது?

தமிழர்கள் அல்லாத மாணவர்களையும் இணைத்துக்கொண்டு பிரித்தானியாவிலுள்ள ஏனைய மாணவர் அமைப்புக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவதனூடாக ஒடுக்குமுறையை உலக மக்களுக்கு அறிவிக்கலாம்.

யாழ். பல்கலைக் கழகத்தை அழித்து கல்வியைத் தனியார் மயப்படுத்தும் இலங்கை அரச பயங்கரவாதத்தின் நாசகாரத் திட்டம் இந்த மிரட்டல்களின் பின்னணியிலிருப்பதை பிரித்தானிய மாணவர்களுக்கு நாம் ஏன் அறிவிக்கூடாது?

இலங்கையில் இனச்சுத்திகரிப்பு அனைத்து வடிவங்களிலும் தொடர்கிறது என்ற உண்மையை புலம்பெயர் தமிழர்களை உணர்ச்சியூட்டிப் பணம் கறப்பதற்கு மட்டுமா பயன்படுத்தப் போகிறோம்?

பரந்துபட்ட சமூக மட்டங்களிலிருந்தும், பல உலக நாடுகளிலிருந்தும் குவிந்திருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏன் பிரச்சார நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் ஆரம்பிக்கக் கூடாது?
இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலின் கீழ் அதன் தமிழ் நண்பர்களால் களியாட்டங்களை நோக்கித் திசைதிருப்பப்படும் பிரித்தானியப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களை ஏன போராட அழைக்க முடியாது?

பிரித்தனியத் தமிழர் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, நாடுகடந்த தமிழீழம் போன்றவற்றை நோக்கிய பகிரங்க வேண்டுகோளாக இனியொரு சார்பில் இக் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

Exit mobile version