Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அறிவிப்பால் நாம் கவலைப்படவில்லை!:இலங்கை அரசாங்கம்!

manik19இலங்கையின் வடபகுதியில், சுமார் இரண்டரை லட்சம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அவசர உதவிகளை தவிர ஏனைய அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியுள்ளது.

அங்கிருக்கின்ற மிகப்பெரிய முகாமுக்கு பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபொஸ்டர் அவர்கள் விஜயம் செய்து திரும்பியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அதே நேரம் பருவ மழைக்காலத்தில் அங்கு ஏற்படக் கூடிய எந்தவிதமான வெள்ளமும் வடிந்தோடும் வகையில் தேவையான வடிகால் வசதிகளை தாம் முகாம்களில் அமைப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.

ஆனால், அதனுடன் பிரிட்டனும், ஐநாவும் உடன்படவில்லை.

மனிக்ஃபார்ம் முகாமுக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபொஸ்டர், அங்கு கடுமையான மழை பெய்தால், பெரும் அழிவும், தொற்றுநோய் பரவலும் ஏற்படும் என்று அச்சம் வெளியிட்டுள்ளார்.

முகாமில் உள்ளவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் அங்கிருந்து வெளியேறும் பட்சத்தில், அவர்களுக்கு ஆதரவு வழங்கக்கூடிய குடும்பங்களுடன் சென்று தங்குவதற்கான வசதியுடையவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.

அந்த முகாம்களில் தமது நிலலைமை குறித்து பேசுவதற்கு ஆர்வத்துடன் இருந்த மக்களுடன் பிபிசிக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அங்கு நிலைமைகள் மிகவும் மோசம் என்றும், நல்ல குடிநீர் கிடையாது என்றும், போதுமான வடிகால் வசதி கிடையாது என்றும், அதிக வெப்பம் காரணமாக மக்கள் பலர் நோயில் வீழ்வதாகவும், அங்கிருந்த பெண்கள் மாறி மாறி கூறினார்கள்.

முடிந்தவரை விரைவாக எங்களை எங்கள் வீடுகளுக்கு அனுப்புங்கள் என்று ஒருவர் கூறினார்.

மனிக்பார்ம் முகாமில் இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் பேர் இன்னமும் இருப்பதாக கூறுகின்ற அரசாங்கம், இதுவரை இருபதினாயிரம் பேர் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக, அல்லது விடுவிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறது.

கவலைப்படவில்லை

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கான உதவியை ஐக்கிய ராஜ்ஜியம் நிறுத்தினாலும், வேறு பல நாடுகள் இலங்கைக்கு தொடர்ந்து உதவ தயாராக இருப்பதாகவும் இந்த முடிவால் தாம் கவலைப்படவில்லை என்றும் இலங்கை சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் ராஜீவ விஜயசிங்க பி பி சியின் சிங்கள சேவையான சந்தேஷியாவிடம் தெரிவித்தார்.

Exit mobile version