பிரிட்டனில் படிப்பை முடித்த பின், இரண்டு ஆண்டுகள் வரை வேலை பார்க்க வழி செய்யும் விசா சலுகை, ரத்தாகிறது.இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைச் சேராத மாணவர்கள், பிரிட்டனில் படிக்க ஆர்வம் காட்டி வந்தனர். பிரிட்டனில், படிப்பை முடித்த பிறகு, அவர்கள் அங்கேயே தங்கி, இரண்டு ஆண்டுகள் வரை வேலை பார்க்க மாணவர் விசாவில் வழி செய்யப்பட்டு வந்தது. பிரிட்டனின் குடியேற்ற விதி சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு தங்கியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த, புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.அரசின் இந்த திட்டத்தை பிரிட்டிஷ் கவுன்சில் எதிர்த்துள்ளது. அரசின் இந்த புதிய விசா சட்டத்தால் வரும், செப்டம்பர் மாதம் துவங்க உள்ள படிப்புகளுக்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டதாகவும், இந்த சட்டத்தால், வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணி கணிசமாக குறையும் எனவும், பிரிட்டிஷ் கவுன்சில் தெரிவித்துள்ளது.