20.03.2009.
பிரான்ஸில் நேற்று நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் பல இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இரு மாதங்களில் அங்கு நடைபெற்ற இரண்டாவது பாரிய வேலைநிறுத்தம் இதுவாகும்.
ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே தொழிற்சங்கங்கள் இவ் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
நாட்டின் தற்போது வேலையற்றோர் தொகை 20 இலட்சத்தை எட்டியுள்ளதுடன் இது மேலும் அதிகரிக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர தொழில் நிறுவனங்கள் மூடப்படுதல், பணிநீக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வறுமை அதிகரிப்பு, தொழில் பாதுகாப்பின்மை என்பனவும் வேலை நிறுத்தத்திற்கு காரணங்களாகும்.
கடந்த 29 இல் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் சுமார் 20 இலட்சம் பேர் பங்குபற்றியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெறவிருந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த நாட்டின் 75 வீதமான மக்கள் தமது எதிர்காலம் தொடர்பில் தாம் அச்சம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நிதி நெருக்கடி ஸ்பெயின் மற்றும் இத்தாலியைப் போன்று பிரான்ஸைக் கடுமையாகப் பாதிக்காவிடினும் பிரான்ஸின் பொருளாதாரம் சடுதியாக வீழ்ச்சியடைந்து வருகின்றமையால் வேலையிழப்புக்கள் அதிகரிக்கலாமெனவும் இவ் வருடத்தில் சுமார் 5 இலட்சம் பேர் வேலையை இழப்பார்கள் எனவும் அஞ்சப்படுகிறது.
நேற்றைய வேலை நிறுத்தத்தின் போது சுமார் 215 இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததுடன் இதில் அரச மற்றும் தனியார் பணியாளர்கள் பங்குபற்றவிருந்தனர்.
ஜனவரியில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தின் பின்னர் வரிக்குறைப்பு மற்றும் சமூக நலத்திட்டங்களுக்காக 3.2 பில்லியன் டொலர்களை ஜனாதிபதி சார்க்கோஸி ஒதுக்கியிருந்த போதும் இது போதாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
அடிப்படையில் சம்பளத்தை உயர்த்துமாறும் அரசதுறை வேலைவாய்ப்புக்களை குறைக்கும் திட்டத்தைக் கைவிடுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.