சமீப நாட்களில் பிரான்ஸ் எங்கிலும் தொழுகையிடங்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றன. Poitiers இல் உள்ள மசூதி ஒன்றின் கதவுகளின் மீது “அரேபியர்களுக்கு சாவு” என்று தீட்டல்கள் மூலம் எழுதியாகச் சந்தேகிக்கப்பட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டதாக La Nouvelle République தெரிவித்தது.
வெள்ளியன்று காலை, இன்னுமதிகமான இஸ்லாமிய-அச்ச எழுத்துத்தீட்டல்கள் Bayonne மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டன. “சார்லி சுதந்திரம்” “படுகொலையாளர்கள்”, “அழுக்கு அரேபியர்கள்” என்பன போன்ற சுலோகங்கள் மசூதியின் கதவுகளிலும் குப்பைத்தொட்டிகளிலும் தீட்டப்பட்டிருந்தன.
Le Mans இல் உள்ள மசூதி அருகே வியாழனன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டன. மசூதிக்குள்ளாக பயிற்சிக்கான கையெறி குண்டு ஒன்றும் சன்னல்களில் ஒன்றின் வழியாக சுடப்பட்டு விழுந்திருந்த ஒரு தோட்டாவும் அடுத்த நாள் காலையில் போலிசால் கண்டுபிடிக்கப்பட்டது.
Port-la-Nouvelle இல் உள்ள ஒரு தொழுகை அறையின் கதவுகள் மீதும் திராட்சைக்கொத்து வெடி (Grapeshot) வீசப்பட்டது. உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
Villefranche-sur-Saône இல் மசூதிக்கு அடுத்திருக்கும் கெபாப் கடை ஒன்று வெடிப்பு ஒன்றினால் தூக்கிவீசப்பட்டது. Corsica இல் Corte இல் உள்ள முஸ்லீம் தொழுகை அறை ஒன்றின் நுழைவாசலில் பன்றி ஒன்றின் தலையும் உடல் உள்ளுறுப்புகளும் தொங்க விடப்பட்டிருந்தன.
தனிமனிதர்களும் கூட அச்சுறுத்தப்பட்டுள்ளனர் அல்லது பயமுறுத்தப்பட்டுள்ளனர். Bourgoin-Jallieu இல் இருக்கும் Oiselet உயர்நிலைப் பள்ளியில் சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடுகளுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நிமிட மவுன அஞ்சலியின் சமயத்தில் அப்பள்ளி மாணவர் ஒருவர் கேலி செய்யப்பட்டதோடு அடித்தும் உதைக்கப்பட்டார்.
Caromb இல் உள்ள ஒரு வீதியில், ஒரு இஸ்லாமியக் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு கார் மீது பல முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், ஆயினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் Le Figaro செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தினாலும் நவ-பாசிச தேசிய முன்னணி (FN) ஊக்குவிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாலும் தூண்டப்பட்டுக் கொண்டிருக்கும் அபாயகரமான இனவாத சூழலுக்கு இந்த இஸ்லாமிய-அச்ச நடவடிக்கைகள் சாட்சியமளிக்கின்றன.
By Anthony Torres
http://www.wsws.org/tamil/articles/2015/jan/150110_fren.shtml