சிக்கனப்படுத்தல் என்ற தலையங்கத்தில் வரிப்பணத்தை அதிகரிப்பதற்கும் தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதற்கும் தான் எதிரானவர் என்று தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரான்சுவா ஒல்லோந் பிரான்சின் அதிபராவதற்கு சற்று முன்பதாகவே பிரான்சின் பங்குச் சந்தை சரிய ஆரம்பித்தது. அதிபராகி மறுநாளே மீண்டும் அது வழமைக்குத் திரும்பியது. தேர்தல் பிரசாரத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்காற்றில் பறக்கவிடப்பட்டு மீண்டும் முதலீட்டாளர்களைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே ஒல்லோந் இறங்கியிருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். பிரஞ்சுப் பத்திரிகையான லூ மொந் (le monde) ஒல்லோந்தின் தெரிவிற்குப் பின்னர் “புதிய ஒப்பந்தம்” ஒன்று உருவாகும் என தலையங்கம் எழுதியுள்ளது. பங்குச் சந்தை மற்றும் ஏனைய நவ-தாராளவாதப் பொருளாதார நிறுவனங்கள் ஊடாக மக்களின் பணத்தை உறிஞ்சிக்கொள்ளும் சுரண்டல் வர்க்கத்தின் பணத்திற்கு வரி விதிக்கும் வரை அரச கடன் அதிகரிக்கும் நிலையே காணப்படுகிறது. அந்த வர்க்கத்தின் கட்டுப்பாட்டினுள் அரசுகள் உருவாக்கப்படுவதால் பில்லியன்களை கையகப்படுத்திக்கொள்வோருக்கு வரிவிதிப்பது சாத்தியமற்றதாகிவிடுகிறது.
ஆக, ஒல்லொந்திற்கும் சார்கோசிக்கும் குறித்த வேறுபாடுகள் எதுவும் காணப்படாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.