2001 இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பின் பயங்கரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற காரணம் காட்டி ஈராக்கின் எண்ணை வளங்களை அபகரிக்க ஈராக் மீது போர் தொடுத்தது அமெரிக்கா. அமெரிக்க மக்களிடம், ஈராக்கில் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி ஜனநாயகத்தை நடைமுறைபடுத்துவதாகவும், பேரழிவு ஆயுதங்களை கைப்பற்றி அழிப்பதாகவும், உலகின் கொடிய தீவிரவாத இயக்கமான அல்கைதாவை ஒழிப்பதாகவும் பொய் பிராச்சாரங்களை அமெரிக்க அரசு அவிழ்த்து விட்டது.
ஆனால் அமெரிக்க ராணுவம் ஈராக்கில் பொது மக்களை சுடுவது, பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது, சொத்துக்களை அழிப்பது, யாரை வேண்டுமானாலும் சுடுவது என அப்பாவி மக்களையும், பத்திரிகையாளர்களையும் கூட கொன்று குவித்தது.
பிராட்லி மேனிங் எனும் கணிப்பொறி வல்லுனர், ராணுவத்தின் மீது கொண்ட நன்மதிப்பால், ராணுவத்தில் இணைந்தார். பின்பு கணிப்பொறி தகவல்களை ஆய்வு செய்யும் ஊழியராக அமெரிக்க ராணுவத்திற்கு உதவுவதற்காக ஈராக் சென்றார்.
ஈராக்கில் பிராட்லி மேனிங் கண்ட, கேட்ட நிகழ்ச்சிகள் மூலமாகவும், அவரது பணி தொடர்பாக கணிப்பொறியில் பார்க்கக் கிடைத்த அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்ததிலும், அமெரிக்க அரசின் உண்மை முகத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அமெரிக்க ராணுவம் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதையும், உண்மையில் அமெரிக்க மக்கள் நினைப்பது போன்று ஈராக்கில் ஜனநாயகத்தை கொண்டு வருவதற்காக படையெடுப்பு நடக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்கிறார்.
உலக மக்களுக்கு இந்த உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும், என அதற்கான தகவல்களையும், ஆதரங்களையும் சேகரிக்கிறார். கவனிக்கவும், குவிந்து கிடக்கும் ராணுவ ரகசியங்கள் மத்தியில் தவறுகளை அம்பலப்படுத்தும் ஆவணங்களை மாத்திரம் கவனமாக சேகரித்து விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கிறார்.
தன் நாட்டை காட்டிக் கொடுக்க வேண்டும் என்பது அவர் எண்ணமில்லை, அமெரிக்க அரசு தவறு செய்கிறது அதை மறைத்து அமெரிக்க மக்களுக்கு பொய் சொல்லுகிறது, உண்மையில் ஈராக்கில் என்ன நடக்கிறது என்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் , அவர்களுக்கு அதை தெரிந்து கொள்ள முழு உரிமை இருக்கிறது.
விக்கிலீக்ஸ் மேனிங்கிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான ஆவணங்களை பெற்று உலகிற்கு அறிவிக்கிறது. அமெரிக்க பத்திரிகையான நியுயார்க் டைம்ஸ், இங்கிலாந்து பத்திரிகையான கார்டியன் ஆகியவற்றின் உதவியுடன் இந்த ஆவணங்கள் வெளி வருகின்றன.
எதிர்ப்பு
மேனிங்கை விடுதலைச் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்.
கொதித்தெழுந்த அமெரிக்க அரசும், ராணுவமும் விசாரணை நடத்தி பிராட்லி மேனிங்கை அடையாளம் கண்டு கைது செய்கின்றனர். அவர் சிறையில் சித்திரவதை செய்யப்படுகிறார். பிராட்லி மேனிங் ராணுவ ரகசியங்களை அமெரிக்க எதிரிகளுக்கு கொடுத்து உதவினார், அல்கைதாவிற்கு உதவினார் என சென்டிமெண்டை பயன்படுத்தி அவரை அமெரிக்காவின் வில்லன் ஆக்க முயற்சிக்கிறது
பிராட்லி மேனிங் மீது மரண தண்டனைக்கு உரிய “எதிரிக்கு உதவுதல்”(Aiding the Enemy), போர்க் காலத்தில் ராணுவ தகவல்களை எதிரிக்கு கொடுப்பது, போர்க் கால ராணுவ ரகசியங்களை வெளியிடுவது போன்ற குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறது. இது போன்ற சுமார் 22 குற்றச் சாட்டுகளும் 3 இதர குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்படுகிறது.
சுமார் மூன்று வருடங்கள் வரை ராணுவ நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நடகின்றன. ஒரு பக்கம் அமெரிக்க அதிபர் முதல் பல வலதுசாரிகள் வரை மேனிங்கை குற்றவாளி என கருத்து தெரிவிக்க பொதுவான அமெரிக்க மக்களும், உலக மக்களும் மேனிங்கிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
விசாரணையின் போது பிராட்லி மேனிங், தான் அமெரிக்க மக்களுக்கு உண்மையாக இருந்ததாக திரும்பத் திரும்ப கூறினார். தன் நாட்டு மக்களையே வேவு பார்க்கும் அமெரிக்க அரசாங்கத்தை மேலும் கோபப்படுத்த இதுவே போதுமானது.
விசாரணைகளும் வாதங்களும் முடிந்துவிட்ட நிலையில் ஜூலை 30-ம் தேதி மதியம் 1 மணிக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேனிங்
தீர்ப்புக்குப் பிறகு அழைத்துச் செல்லப்படும் மேனிங்
எதிரிக்கு உதவி செய்தல் என்ற குற்றச் சாட்டு மேனிங்கிற்கு மரண தண்டனை பெற்றுத் தரலாம் என்ற நிலையில் அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றத்தின் முன் குவிந்து முழக்கங்கள் எழுப்பினார்கள். பிராட்லி மேனிங் அமெரிக்காவின் ஹீரோ என்று மக்கள் கருத்து தெரிவித்தனர். உலகின் பல ஜனாநாயக சக்திகள் தீர்ப்பை உற்று கவனித்தன.
ராணுவ நீதி மன்றத்தில் இறுதித் தீர்ப்பை படித்த நீதிபதி, மேனிங் மீது சுமத்தப்பட்டிருந்த ”எதிரிக்கு உதவி செய்தல்” என்ற வழக்கில் அவரை நிரபராதி என விடுவித்தார், இதனால் அவருக்கு மரண தண்டனை இல்லை என்பது உறுதியானது. ஆனால் அவர் மேல் சுமத்தப்பட்டிருந்த இதர 21 குற்றச்சாட்டுக்களில் 4-ல் மட்டும் அவரை நிரபராதி என அறிவித்து சுமார் 17 வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பளித்தார். அந்த குற்றங்களுக்கான தண்டனையை மறு நாள் அறிவிப்பேன் என தன் உரையை முடித்துக் கொண்டார். இந்த குற்றங்களுக்கு சுமார் 150 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம் என கருதப்படுகிறது.
ஈராக்கில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அவற்றுக்கான ஆதாரங்கள் வெளியான பிறகும் எந்தவித விசாரணையும் இன்றி உல்லாசமாக இருக்க, அமெரிக்க மக்களுக்கு உண்மையை கூறியதற்காக மேனிங் சிறைத் தண்டனை அனுபவிப்பது தான் அமெரிக்காவின் ஜனநாயகம் போலும்.
அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகளில் முக்கியமானவை கருத்து சுதந்திரம், தனி நபர் சுதந்திரம், வெளிப்படையான அரசு நிர்வாகம் போன்றவை. ஆனால் பிராட்லி மேனிங் அமெரிக்க சட்டங்களின் படி குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டிருப்பதிலிருந்து அத்தகைய கருத்துச் சுதந்திரம் என்பது வெறும் ஏமாற்று மட்டுமே என்பது நிரூபணமாகிறது. நடைமுறை அமெரிக்கச் சட்டங்கள் மக்களுக்கு எதிராக இருப்பதையும், அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படுவதையும் இவ்வளவு அப்பட்டமாக யாராலும் அமபலப்படுத்த முடியாது. அம்பலபடுத்தியவர்கள் அமெரிக்க நீதித் துறையும், ராணுவமும்.
அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் நடக்கும் மக்கள் விரோத செயல்களைப் பற்றிய உண்மைகளை வெளி உலகிற்கு சொல்லுபவர்களை விசில்ப்ளோவர்கள் என்று அழைப்பார்கள். அமெரிக்காவின் வெளிப்படையான அரசு நிர்வாகம் என்பதை இவர்கள் தமது பலமாகக் கொண்டு தம்மை காத்துக் கொள்ளும் சட்டமாக கருதுகிறார்கள். ஆனால் உலகின் மிக முக்கிய விசில் ப்ளோவரான மேனிங் குற்றவாளி என்று தண்டிக்கப்பட உள்ளார்.
மேனிங் வெளியிட்ட ஆவணங்களில் அவர் அமெரிக்க ரகசியம் எதையும் வெளியிடவில்லை, அந்த ஆவணங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடிய ரகசியமில்லாத ஆவணங்கள் தான், அதை வெளியிட்ட மேனிங்கை உண்மையில் பாராட்ட வேண்டும், அதை விடுத்து அவரை குற்றவாளி ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்?
தேசபக்தி, தேசிய வெறியை கொண்டு அமெரிக்க அரசு ஈராக்கில் நிகழ்த்தி வந்த போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தியுள்ளார் மேனிங். அவரது நடவடிக்கைகள் அமெரிக்க அரசு சொந்த நாட்டு மக்களையே வேவு பார்ப்பதை அம்பலபடுத்திய எட்வர்ட் ஸ்னோடனுக்கு முன்னுதாரணமாக இருந்து.
தன் வாழ்க்கை, தன் வீடு, தன் சுகம் என வாழ்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பணி புரிவதை விட, மக்களின் நலனுக்காக அவர்களுக்கு உண்மை தெரிவதற்கு தன் வாழ்க்கையை ஆபத்துக்குள்ளாக்கிக் கொண்ட பிராட்லி மேனிங் தான் உண்மையான மக்கள் ராணுவ வீரர். ஹீரோ.
நன்றி : வினவு