Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரன் மாத்தையாவைக் கொன்றதை விடவும் கொடுமையானது

பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது உரிமைகளைப் பறித்து அவரை சிறையில் அடைத்து வைத்திருப்பதானது மாத்தையாவை பிரபாகரன் கூண்டில் போட்டு கொன்றதையும் விட கொடுமையானது. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிகளைப் பறித்து, ஓய்வூதியத்தையும் நிறுத்தும் அளவிலான தீர்ப்பொன்றை இராணுவ நீதிமன்றம் வழங்கியிருப்பதன் மூலம் முழு இராணுவத்துறையும் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இராணுவ நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகளின் அனைத்து அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் வலியுறுத்தினார்.

பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது உரிமைகளைப் பறித்து அவரை சிறையில் அடைத்து வைத்திருப்பதானது மாத்தையாவை பிரபாகரன் கூண்டில் போட்டு கொன்றதையும் விட கொடுமையானது.

இது உறுப்பினர் ஒருவரது சிறப்புரிமைப் பிரச்சினை. இதன் விசாரணை நடவடிக்கைகள் பொம்மையைப் போன்று போலியானதாக அமைய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியியல் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகா தற்போது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். இருப்பினும் அரசாங்கத்தினாலும் இராணுவ நீதிமன்றத்தினாலும் அவரது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

இராணுவ சேவையில் உள்ள ஒருவர் அரசியலில் ஈடுபடவோ அல்லது தேர்தல்களில் போட்டியிடவோ முடியாது என்பது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் அவ்வாறான சேவையில் உள்ள ஒருவர் அந்த சேவையில் இருந்து விலகியதன் பின்னரோ அல்லது ஓய்வு பெற்றதன் பின்னரோ அரசியலில் ஈடுபடுவதற்கும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் சகல உரிமைகளும் இருக்கின்றது என்று அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மேலும் அவர் மீது தேசத் துரோகம், சதித் திட்டம், அரச விரோதம் என்றவாறெல்லாம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜெனரல் சரத் பொன்கோ கூட்டுப் படைகளின் பிரதானி என்ற பதவியை 2009 நவம்பர் மாதம் 12 ஆம் திகதி ராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்.

இவ்வாறான நிலையில் ஜெனரல் பொன்சேகா எமது கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணியினால் கூறப்பட்ட பொய்க் குற்றச்சாட்டினை ஏற்றுக் கொண்ட இராணுவ நீதிமன்றம் அவரது பதவிகளையும் பட்டங்களையும் பறித்ததுடன் அவரது ஓய்வூதியத்தையும் நிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது.

பொய்யான குற்றச்சாட்டுகளாக எமது சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உரிமைகள் பறிக்கப்பட்டவராகியுள்ளார். ஜெனரல் பொன்சேகாவின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டமையானது ஏனைய அரச ஊழியர்களது ஓய்வூதியத்தையும் நிறுத்துவதற்கு ஒரு ஆரம்பமாக அமைந்துள்ளது. என்றார்.

Exit mobile version