Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரன் போன்ற ஒரு மாவீரன் இனிப் பிறக்கப்போவதில்லை:போர்க்குற்றவாளியின் வாக்குமூலம்

v-prabaharan1987 ஆம் ஆண்டிற்கும் 1990 ஆம் ஆண்டிற்கும் இடையே இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் இந்திய அமைதிகாக்கும் படை என்ற பெயரைச் சுமந்துகொண்டு இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது. 1987 ஆம் ஆண்டு கைச்சாத்தான இலங்கை இந்திய ஒப்பந்தந்தின் அடிப்படையில் இலங்கை அரசிற்கு உதவும் நோக்கோடு இலங்கையை ஆக்கிரமித்தது இந்திய இராணுவம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் திட்டமிட்ட யுத்தம் ஒன்றைத் தோற்றுவித்த இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் அதன் துணைக்குழுக்களாக ஈ.என்.டி.எல்.எப், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ போன்றவற்றை அழைத்து வந்தது. பத்மநாபா மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன், வரதராஜப் பெருமாள் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய அமைதிகாக்கும் படை என்ற ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பிரதான துணைக்குழுவாகச் செயற்பட்டது.

பல்வேறு படுகொலைகள், கைதுகள், பாலியல் வல்லுறவு என்று இந்திய இராணுவம் வடக்கையும் கிழக்கையும் கொலைக் கழமாக மாற்றியது.

1989 ஆம் ஆண்டில் வடகிழக்கை விட்டு வெளியேற ஆரம்பித்த இந்திய இராணுவம் தமிழ் தேசிய இராணுவம் என்ற குழுவை உருவாக்கியது. தெருக்களில் நடமாடும் இளைஞர்களைப் பலவந்தமாகக் கைது செய்து உருவாக்கப்பட்ட இந்த இராணுவத்தை சில உளவாளிகள் தலை தாங்கினர்.
தமிழ்த் தேசிய இராணுவத்தில் இணைக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்த அழிவுகளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் தலைமை வகித்தவர்களில் ஒருவர் கேணல்.ஹரிகரன் என்ற இந்திய இராணுவ அதிகாரி.

கேணல்.ஹரிகரன்

கேணல் ஹரிகரினின் இந்திய அமைதிகாக்கும் படையின் புலனாய்வு துறையில் தலைமைப் பதவியை வகித்தவர். இலங்கையில் இந்திய இராணுவத்தின் போர்க்குற்றங்கள் அனைத்திலும் பங்கு வகித்தவர். ஆயிரமாயிரமாய் அப்பாவிகள் கொல்லப்பட்டதன் பின்னணியிலும், பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னணியிலும் ஹரிகரனின் பங்கும் இருந்திருக்கிறது.

ஓய்வு பெற்ற பின்னர் இந்த உளவுத்துறை அதிகாரி ஈழப் போராட்டத்தில் தலையிடுகிறார்.

அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் போன்ற ஒரு மாவீரன் தமிழர்களிடத்தில் இனிப் பிறக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார். இந்திய அரசு 80 களில் விடுதலை இயக்கங்களுக்குப் பயிற்ச்யளித்து அழித்ததைப்போன்று மேலும் முயற்சிகளில் ஈடுபடலாம் என்ற அச்சம் இக்கருத்து ஏற்படுத்துகின்றது. பிரபாகரனையும் தமிழ்ப் பேசும் மக்களின் அவலத்தையும் உளவாளிகள் கூடப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை இது மேலும் தெளிவாகக் காட்டுகின்றது. ஈழப் போராட்டம் என்பது ஜனநாயக முற்போக்கு சக்திகளின் இணைந்த போராட்டமாகவன்றி உளவுப்படைகளின் கோரக்கரங்களில் சிக்குண்டிருப்பதை இது காட்டுகின்றது.

Exit mobile version