தமிழகத்தில் நடைபெறும் எல்லா அரசியல் கட்சி மாநாடுகளிலுமே பிரபாகரன் படம், டி ஷர்ட்டுகள் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. தமிழகக் கூட்டங்களில் எப்போதுமே கவர்ச்சிகரமான கிராக்கி பிரபாகரன் படத்திற்கு உண்டு.இந்நிலையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் மாநாடுகளிலும் பிரபாகரன் படம் புலி இயக்க ஆதரவு நூல்கள் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் பெரியாரின் படம், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சடிக்கப்பட்ட காலண்டரை விற்றது தொடர்பாக பெரியார் திராவிடர் கழக உறுப்பினர் பி. சுப்பிரமணியன், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின்கீழ் சிங்காநல்லூரில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பிணையில் வந்த சுப்ரமணியன் இப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பது: தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவரின் புகைப்படம் அல்லது படத்தை வைத்திருப்பது என்பது அந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமையாது. மேலும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 39 (1) (பி) (1) ஆனது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்ட பேச்சுரிமையைப் பறிப்பதாக உள்ளது. எனவே, அந்த சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும். தவிர, என் மீதான முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தமிழக காவல்துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.