Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரன் நன்றாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்!!!:பழ. நெடுமாறன்.

 

“பிரபாகரன் நன்றாகவும் , பாதுகாப்பாகவும் உள்ளார் என்ற உறுதியான செய்தி கிடைத்து இருக்கிறது” என்று நேற்று பெங்களூர் கருத்தரங்கில் பங்குகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரும் ,உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான  பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு சார்பில் நேற்று பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் ஹஈழத்தமிழரும்-நமது கடமையும்’ என்ற கருத்தரங்கு நடந்தது. அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவனர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்ச்சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார்.

உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-
 

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிகவும் நன்றாக உள்ளார். மிக பத்திரமாக இருக்கிறார். எந்த கட்டத்திலும் மீண்டும் தோன்றி தமிழீழ போராட்டத்துக்கு தலைமை தாங்கி போராடுவார். அதை அவரே அறிவிப்பார். பிரபாகரன் இறந்து விட்டார் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. விடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் பத்மநாபன் பிரபாகரன் இறந்ததாக செய்தி வெளியிடும் முன்பு என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவ்வாறு செய்தி வெளியிட நீங்கள் யார்? என்று கேட்டேன். எனது கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை.

நம்மை குழப்பவும் , போராட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையிலும் பரப்பப்படும் பொய் செய்திகளை யாரும் நம்பக்கூடாது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று எனக்கு உறுதியான செய்தி களத்தில் இருந்து கிடைத்து உள்ளது. தம்பி பிரபாகரன் தலைமையில் போராட்டம் முன் நிறுத்தப்படும். அப்போது உலக தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அதுவரை நாம் ஒன்று திரண்டு எந்த ஒரு குழப்பத்துக்கும் ஆளாகாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பழ. நெடுமாறன் பேசினார்.

விழாவில் அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவனர் ராமமூர்த்திக்கு பெங்களூர் மாவட்ட குடிசைவாசிகள் நலச்சங்கம் சார்பில் ஹஏ.பி.எஸ் சண்முக சுந்தரம்’ விருதை பழ.நெடுமாறன் வழங்கினார். அப்போது குடிசைவாசிகள் நலச்சங்க தலைவர் வி.ஜி.ஸ்ரீதர் , பெங்களூர் மக்கள் நலச்சங்க தலைவர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.

முன்னதாக அம்பேத்கார் சட்ட கல்லூரி மாணவர்கள் ஈழத்தமிழர்கள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

Exit mobile version