Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரன் ஜனநாயக வழிக்கு வந்தால் வடமாகாண முதலமைச்சர் பதவி!!!:அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன .

07.09.2008.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப்போராட்டத்தை நிறுத்திவிட்டு ஜனநாயக வழிக்கு வந்தால் அவருக்கு வடமாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள முடியும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வறக்காபொல நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் அதாவுட செனிவிரட்ன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் கூறியதாவது;

கிழக்கில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட பிள்ளையான் ஆயுதப்போராட்டத்தைக்கைவிட்டு ஜனநாயக வழிக்கு வந்ததால், அவரை முதலமைச்சராக மக்கள் தெரிவு செய்தனர். இன்று கிழக்கில் அவர் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதேபோலவே பிரபாகரனும் செயற்படவேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தோம். ஆனால், பாமரமக்கள் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்ததால் தான் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அதனால்தான் ஐக்கிய தேசியக்கட்சி அத்தேர்தலில் தோல்வியடைந்தது என்பதை நாம் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தபோது தெரியவந்தது.

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பிரசாரம் செய்த தொண்டமான், சந்திரசேகரன் இன்று அமைச்சர்களாகியுள்ளனர்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அரசுடன் இணைந்து செயற்பட்டால் சர்வதேச சமூகம் இப்பிரச்சினையில் தலையீடு செய்யாது என்றுதான் அரசுக்கு ஆதரவு அளிக்க ஐக்கிய தேசியக்கட்சி முன்வந்தது. அதன்படி அலரிமாளிகைக்கும் சென்று உடன்படிக்கையில் கையொப்பமிட்டோம்.

ஆனால், திஸ்ஸ அத்தநாயக்க அரசுக்கு எதிராக பேசத்தொடங்கினார். ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக ஆட்சியை கவிழ்க்கப்போவதாக கூறினார். இதனையடுத்தே நாம் கருஜயசூரிய தலைமையில் அரசுக்கு ஆதரவு வழங்கி வருகின்றோம்.

இதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணி அரசை இக்கட்டான நிலைக்குத் தள்ளத் தொடங்கியது. வடக்கில் படையினர் யுத்தத்தில் வெற்றி பெற்றுவரும் இத்தருணத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆட்சியாளர்களுக்கு பல நிபந்தனைகளை விதித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்குமாறும், சம்பள உயர்வை வழங்குமாறும் கூறி வீதிக்கு இறங்கினார்கள். ஆனால் மக்கள் எமக்கே ஆதரவை அளித்துள்ளனர்.

எவர் என்னதான் சொன்னாலும் இந்த ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது. நாடு முன்னேறிக்கொண்டு செல்கிறது.

ஐக்கிய தேசியக்கட்சி சமுர்த்திக்கு 8 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தது. ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமுர்த்திக்கு 11.9 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

சர்வதேச சந்தையில் உரத்தின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள போதிலும், அரசு உரத்துக்கு 350 ரூபாவை நிர்ணயித்துள்ளது.

கிழக்கு விடுதலைப்புலிகளிடம் இருந்து எப்படி மீட்கப்பட்டதோ அதேபோலவே வடக்கையும் ஜனாதிபதி விரைவில் புலிகளிடமிருந்து மீட்டெடுத்து அங்கே ஜனநாயகத்தை நிலைநாட்டுவார். எனவே இன்றைய தருணத்தில் நாம் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது அவசியம்.

கடந்த மாகாண சபைத் தேர்தல்களில் எதிர்க்கட்சியினர் என்ன வெல்லாம் கூறியும் மக்கள் எம்மையே தெரிவு செய்துள்ளனர் என்றார்.

 

Exit mobile version