Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரன் எப்போதும் யுத்த களத்திற்கு வந்ததில்லை : கருணா

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான படை நடவடிக்கையால் அங்குள்ள மக்களை பிரபாகரனின் பிடியிலிருந்து விலக்கிக் கொள்ளலாம் எனவும், இதுவரை முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கையால் புலிகளின் பலம் 60வீதத்தால் குறைந்துள்ளதாகவும் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் கருணாஅம்மான் நேற்று தெரிவித்துள்ளார். பொலநறுவையில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இத்தகவலை வழங்கியுள்ளார். புலிகள் அமைப்பு தற்போது பாரிய தோல்வியை தழுவியுள்ளது. வடக்கில் புலிகளின் பலம் நூற்றுக்கு 60வீதம் குறைந்துள்ளதால் அவர்கள் இறுதி துரும்பாக இரசாயன ஆயுத தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் வடபகுதி கிராமங்களிலுள்ள மக்களை கொலை செய்வதற்காக கண்ணிவெடிகளை புதைப்பதற்கும் இடமுண்டு. அரசாங்கத்தின் பாதுகாப்பு படைகள் ஐந்து பிரதேசங்கள் ஊடாக முன்னேறி செல்வதால் பிரபாகரனுக்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் யுத்த களத்திற்கு வந்த நபரல்ல. நான் யுத்தகளத்தில் 22வருடங்கள் இருந்தவன். அவர் அந்தக் காலத்தில் ஒருபோதும் யுத்தகளத்திற்கு வந்ததில்லை. பிரபாகரனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் முன்வர முடியாது. தற்போது வடக்கிலே யுத்த நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. அங்குள் தமிழ் மக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்டுக் கொள்ளலாம் என்பது எனது நம்பிக்கை. கிழக்கு மாகாணத்தை மீட்டு மக்களுக்காக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது போல் வடபகுதியிலும் மக்களுக்காக அப்பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படுமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் பொலநறுவை மாவட்டத்திற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் மங்களம் மாஸ்டருக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டங்களிலும் கருணாஅம்மான் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version