Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரன் எந்த இடத்தில் கொல்லப்பட்டாரோ அதே இடத்தில்அவர் உடல் தகனம் செய்யப்ப்பட்டுவிட்டது:இராணுவம்.

இலங்கையின் வடக்கே இராணுவத்துடன் நடந்த கடும் மோதல்களின் போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டாக கூறப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியுள்ளார்.

அவர் மோதலின் போது எந்த இடத்தில் கொல்லப்பட்டாரோ அதே இடத்தில் அவர் தகனம் செய்யப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

அவரை நினைவு கூறும் வகையில் யாரும் வந்து அஞ்சலி செலுத்த வழி ஏற்படாமல் இருப்பதற்காகவே அவர் புதைக்கப்படாமல் தகனம் செயப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட போது எந்தவிதமான சுயாதீனமான கண்காளிப்பார்களும் தேவையில்லை என்று நாங்கள் கருதியதால் அவரது உடலை இராணுவமே தகனம் செய்துவிட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் என்று அடையாளம் காணப்படாத மற்ற விடுதலைப் புலி உறுப்பினர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறும் இராணுவப் பேச்சாளர், மோதலில் கொல்லப்பட்ட அனைத்து தலைவர்களின் உடல்களும் தகனம் செய்யப்பட்டுவிட்டன எனவும் உறுதிப் படுத்துகிறார்.

இந்நிலையில் பிரபாகரனின் சடலம் கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு பிரதேசத்திலேயே அடக்கம் செய்யப்பட்டதுடன் அவரது மகன் சாள்ஸ் அன்டனி, கடற்புலிகளின் தளபதி சூசை, புலனாய்வுப் பிரிவின் தளபதி பொட்டு அம்மான், அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரினதும் சடலங்கள் இவ்வாறாக அடக்கம் செய்யப்பட்டன.

பிரபாகரன் குடும்பம்

இதேவேளை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் ஏனைய குடும்ப உறுப்பினர்களான மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் சிறிய மகனான பாலச்சந்திரன் ஆகியோர் தொடர்பில் படைத்தரப்புக்கு இதுவரையில் எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்தும் இதுவரையில் உறுதியாகக் கூறமுடியாதுள்ளது.

இதேவேளை அவர்கள் மூவரது சடலங்களும் படையினரால் மீட்கப்படவில்லை. இந்நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் பாதுகாப்பு தரப்பினரால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Exit mobile version