Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரனை அழிக்கும் அதேநேரம், தெற்கில் இங்கு ஹிட்லர் ஒருவரை உருவாக்கிக் கொள்ள நாடு தயாராக இல்லை:ஜே.வி.பி.எம்.பி.பிமல் இரட்நாயக்க.

19.11.2008.

வடக்கில் பிரபாகரனை அழித்தொழிக்கும் அதேநேரம், தெற்கில் ஹிட்லர் போன்றதொரு தலைவர் உருவாவதற்கு இடமளிக்க முடியாதென ஜே.வி.பி.யின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான பிமல் இரட்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் பேசும்போதே பிமல் இரட்நாயக்க இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

இலங்கை பயங்கரவாத பிரச்சினைக்கு முகம் கொடுத்திருக்கும் நிலையில் நாட்டின் இறைமையையும், ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு முப்படையினருக்கும் உரியது. அதேபோல், நாடு பயங்கரவாத தாக்கத்திற்கு உட்பட்டிருக்கும் நிலையில் சர்வதேச ரீதியில் நாட்டின் இறைமையையும், ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு முப்படையினரைவிட வெளிநாட்டமைச்சுக்கே இருக்கிறது.

அத்துடன், வெளிநாடுகளின் அழுத்தங்களிலிருந்து நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் பொறுப்பும் வெளிநாட்டமைச்சுக்கே உள்ளது.

அண்மைக் காலமாக இலங்கை ஜனநாயகமற்ற நாடென சர்வதேச ரீதியில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்பட முடியாத நாடு, ஊடக சுதந்திரமற்ற நாடு என பல குற்றச்சாட்டுகள் இலங்கை மீது சுமத்தப்பட்டன. மனித உரிமைகள் பாதுகாக்கப்படாத நாடு என்றும் இலங்கை மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இலங்கை மீது இந்த அழுக்குப் படிவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களும், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் மட்டுமே காரணமல்ல, இலங்கையை ஐ.நா.மனித உரிமை பேரவையில் அங்கத்துவ நாடாக சேர்த்துக் கொள்வதற்கு பிரதான 5 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதில் படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவுமில்லை, அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை துன்புறுத்துகிறது, 17 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமுல் செய்யப்படாமை போன்றன இதில் வெளிப்படையான குற்றச்சாட்டுகளாக இருந்தன.

ஐ.நா.நிறுவனங்களோ, எந்த மனித உரிமை அமைப்புகளோ படையினர் இராணுவ நடவடிக்கைகளின் போது தமிழ் மக்களைத் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டவில்லை. ஆனால், அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதில் சில புனையப்பட்டவையாக இருந்தாலும் பல உண்மைகளும் இருக்கின்றன.

உலகில் பெரும்பாலானோர் பாவிக்கும் இணையத்தள விபரத் தேடலொன்றுக்கு சென்றால், இன சுத்திகரிப்பில் கொழும்பிலிருந்து தமிழர்கள் வடக்கு, கிழக்கிற்கு வாகனங்களில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டமைக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இன்று இலங்கை மனித உரிமை மீறல்கள் மிக்க நாடாகவும், தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் நாடாகவும் இனங் காட்டப்பட்டுள்ளது.

சார்க் மாநாட்டிற்கு வந்த எந்த தலைவர்களும் விடுதலைப் புலிகள் பற்றி பேசவில்லை. அகமதாபாத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பைப் பற்றியே அவர்கள் பேசினர். இந்த மாநாட்டிற்கு 300 கோடி ரூபா வீணாக செலவிடப்பட்டது.

வடக்கில் விடுதலைப் புலிகளை படையினரைக் கொண்டு அடிக்கும் அதேநேரம், இங்கு எதிர்க்கட்சி சார்ந்தவர்களை திணைக்களங்களை கொண்டு அடிக்கின்றனர். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேசவிடாத அளவு அமைச்சர்களும், ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் செயற்பட வேண்டிய அளவுக்கு ஜனாதிபதியின் அழுத்தமுள்ளது.

வடக்கில் பிரபாகரனை அழிக்கும் அதேநேரம், தெற்கில் இங்கு ஹிட்லர் ஒருவரை உருவாக்கிக் கொள்ள நாடு தயாராக இல்லை. அன்றும் இப்படித்தான் வடமராட்சியை படையினர் அடித்து பிடித்தபோது, தெற்கில் ஹிட்லர் தலைவர் ஒருவர் உருவானார். அதைப்போன்று மீண்டுமொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த நாம் தயாரில்லை.

எமது நாட்டிற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் இல்லாமல் போனமைக்கு ஏகாதிபத்திய நாடுகள் மட்டுமன்றி, அரசாங்கத்தின் செயற்பாடுகளுமே காரணமாக அமைந்திருக்கிறது.

இதேபோல் தான் கருணா விடயமும். படையினருக்கு எதிரான சர்வதேச அமைப்புகளின் குற்றச்சாட்டுகளில் கருணா, பிள்ளையான் தொடர்புடைய குற்றச்சாட்டுகளே அதிகம் இருந்தன. இந்த நிலையில் இப்போது அவர்கள் அரசில் அங்கம் வகிப்பதால் எவருக்கு வேண்டுமானாலும் இலங்கையை நோக்கி கைநீட்டக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

(கே.பாலசுப்பிரமணியம், டிட்டோகுகன் )

Exit mobile version