ஈழப் போராட்ட வரலாறு என்பது பிரபாகரனை நிராகரித்து எழுதப்பட முடியாது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழித்துச் சிதைக்கப்படும் வரையான போராட்டப் பின்புலம் பிரபாகரன் என்ற தனிமனிதனினின் ஆளுமை, அதிகாரம் என்ற அனைத்துக் கற்பிதங்களையும் சூழவே தனது ஒவ்வொரு அசைவையும் கொண்டிருந்தது.
ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பிரபாகரனையும் போராளிகளையும் மக்களையும் கொலை செய்துவிட்டு உலக நாடுகளின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரச பயங்கரவாதி ராஜபக்சவைக் காப்பாற்றும் வியாபாரிகள் பிரபாகரன் வாழ்கிறார் என்கின்றனர்.
தனது 17 வது வயதில் போராட்டத்திற்காக ஆயுதங்களை ஏந்திய பிரபாகரன் மரணித்துப் போகும் வரை அதனைக் கைவிடவில்லை. பிரபாகரனை விமர்சிப்பதென்றால் எதிர்காலப் போராட்டத்தைச் செழுமைப்படுத்தும் அரசியல் விமர்சனங்களாகவே முன்வைக்கப்பட வேண்டும். இதனைத் தவிர்த்து ஒரு பகுதி இலங்கைப் பாசிச அரசுடன் இணைந்து சேறடிக்கிறது. மறுபகுதி பிரபாகரனைத் தெய்வமாக்குகிறது. இந்த இரண்டு பகுதிகளுமே மக்களை மந்தைகளாக்கும் ஒரே கூட்டத்தைச் சார்ந்தவர்கள்.
புலம்பெயர் நாடுகளிலிருந்து, தென்னிந்தியா ஈறாக அனைத்துப் பிழைப்பு வாதிகளும் பிரபாகரன் வந்தால் தம்மிடமுள்ள மக்களின் சொத்திற்குக் கணக்குக்காட்டுவோம் என்கிறார்கள். இதற்காகவே ஆயிரமாயிரமாய் மக்கள் நம்பிய பிரபாகரனை அஞ்சலி கூட இல்லாமல் அனைதையாக்குகின்றனர்.
பிரபாகரனின் சரியான மற்றும் தவறான பக்கங்களிலிருந்து கற்றுக்கொண்டு சுய நிர்ணைய உரிமையை வென்றெடுப்பதற்கான புதிய போராட்டத்திற்கு மக்கள் தயாராக வேண்டும். பிரபாகரன் வருவார் என்ற போலி நம்பிக்கையை வழங்கி மக்களை ஒடுக்கி வைத்திருக்கும் பிழைப்பு வாதிகள் ஓரங்கட்டப்பட வேண்டும். இலங்கைப் பேரினவாத அரசுகள் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களை வாழ விடப்போவதில்லை. மக்களை அணி திரட்டுவதும் புதிய போராட்டத் தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்வதும், உலகம் முழுவதும் போராடும் மக்களோடு இணைந்து நாமும் போராடுவதும் தவிர்க்க முடியாதது. இந்த நிலையில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி புதிய போராட்டத்திற்கான அறைகூவலை விடுப்பது இன்றைய தேவை.
இவ்வேளையில் பெண்ணுரிமைக்காகவும் சமூக ஒடுக்குமுறைக்காஅகவும் குரலெழுப்பும் லண்டன் விஜி இன் அஞ்சலிக் கவிதையை பதிவிடுகிறோம்.
பதின்ம வயதின்
அறியாப் பருவத்துடன்
போரென எழுந்து
பாதை வகுத்து
மரணித்து போன
பிரபாகரன்!
அவலத்துள் அமிழ்த்தி
அழிக்கப்பட்ட
பின்னரும்
அவனைச் சுற்றி
இன்னமும்
பேய்களாய்
ஆய்வாளர்களும்
பொறுப்பாளர்களும்
கூத்தாடுகின்றனர்!!
எல்லா நம் மக்களையும் போல
அன்றைய நாளில்
முள்ளிவாய்க்காலில்
மரணம் நெருங்கிய போது
எல்லோரையும் போலவே
யாருமேயற்று
மரணித்த பிரபாகரன்
அறுபது மாதங்கள் கடந்தும்
இன்னமும் அமைதியற்று!!
எல்லா திசைகளினின்றும்
தலைவன் எனவும் முருகன் எனவும்
தேவன் எனவும்
ஓலமிடும் மனிதப் பேய்களில் இருந்து
இன்றே
விடுதலையாகி
அமைதியடைவாய்!
எமது அஞ்சலிகள்!!!