28.11.2008.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சகல நாடுகளும் இணைந்து செயற்படல் வேண்டும். அதற்காக இந்தியாவிற்கு நாம் தோளோடு தோள் கொடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லõகம தெரிவித்தார்.
இலங்கையின் இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு போன்ற விடயங்களில் ராஜீவ் காந்தி உறுதியாக இருந்தவர் என்பதனால், என்னதான் சமிக்ஞை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்குக் கிடைக்காது என்றும் அவர் சொன்னார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டாரவின் அனுமதியுடன் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:
இந்தியாவின் மும்பை நகரத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற பயங்கரவாத தாக்குதலை அரசாங்கம், ஜனாதிபதி, நாட்டு மக்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். புலிகள் ராஜீவ் காந்தியை கொலை செய்த போது தமிழ்நாட்டில் நிலவிய பதற்றமான சூழ்நிலையே இன்று மும்பையிலும் நிலவுகின்றது.
பயங்கரவாதிகள் பல முனைகளிலும் நின்று கொண்டே தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்பதுடன், பயங்கரவாதத்தை அழிப்பதற்காகவும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் சகல நாடுகளும் இணைந்து செயற்படல் வேண்டும். அதற்காக இந்தியாவிற்கு நாம் தோளோடு தோள் கொடுப்போம்.
சமாதானத்திற்கு எதிராக சர்வதேசம் முழுவதும் பயங்கரவாதம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. வைத்தியசாலைகள், ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் தாக்குதல்களை மேற்கொண்டு மனித அழிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையே நோக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். இதன் மூலமாக சாதாரண மக்களின் பொது வாழ்க்கையை மட்டுமல்லாது மக்கள் மத்தியில் பயம், பதற்றத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை குழப்பி பொருளாதாரத்தை சீர்குலைப்பதையும் நோக்காகவே கொண்டிருக்கின்றனர்.
பயங்கரவாதம் தொடர்பில் எமக்கு 25 வருடகால அனுபவம் இருக்கின்றது. பயங்கரவாதம் உலக நாடுகளில் வியாபித்துள்ளன. புலிகள் கைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். என்பதனால் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒரு குரலாக இருப்போம்.
அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா அர்ப்பணிப்பையும், உறுதியையும் காட்டியுள்ளார். ஒன்று திரண்டு செயற்படுவதற்கும் உறுதியளித்துள்ளார். தொடர்ச்சியான அமெரிக்க தலைமைத்துவம் பொதுவான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது என்பதை நிச்சயமாக கூறுவோம்.
இலங்கையின் இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு மட்டும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுதல் என்பவற்றில் ராஜீவ் காந்தி உறுதியாக இருந்தார். எனினும் பிரபாகரனின் மாவீரர் உரை இந்தியாவிற்கு சமிக்ஞை கொடுப்பதாக அமைந்துள்ளது.எந்த சமிக்ஞையை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்கு கிடைக்காது. புலிகளை தடை செய்வது தொடர்பில் இந்திய நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. புலிகள் தமிழ்நாட்டிலிருந்து பொருட்களையும், தடை செய்யப்பட்ட பொருட்களையும் கடத்துகின்றனர். தமிழ் நாட்டை அதற்காகவே பயன்படுத்துகின்றனர். புலிகள் மீதான தடை தொடராவிடின் இந்திய மண்ணில் பிரச்சினை கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.