பிரணாப் முகர்ஜிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தவிர எல்லா கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ் வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் பிரணாப்பை ஆதரிக்கின்றன.
இடதுசாரி கட்சிகள் வருகிற 21-ந்தேதி கூடி ஆலோசித்து பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதீய ஜனதா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது.
எனவே போட்டி இருந்தாலும், இல்லாவிட்டாலும் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.
மன் மோகன் அரசின் நவதாராளவாதக் கொள்கைகளின் நேரடிச் செயற்பாட்டாளரான பிரணாப், இந்தியா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கப்போகும் வருடங்களில் ஜனாதிபதியாக இருப்பார் என எதிர்வுகூறப்படுகிறது.