Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரகீத் கொலை : கோதாபய முதலாளியின் உத்தரவின் பெயரிலேயே எல்லாம் நடடைபெற்றது

கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சடலத்தை நீர்கொழும்பு கடலேரிக்கு அப்பாலுள்ள கடலில் கல்லில் பிணைத்து எறிந்ததாக பாதாள உலகக்குழுவின் தலைவரான தெமட்டகொட சமிந்த தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தெமட்டகொட சமிந்த குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளின் விசாரணையின் போதே தமது தலைமையிலான குழுவே எக்னெலிகொடவின் சடலத்தை கடலில் வீசியதாக தெரிவித்ததாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொலன்னாவயில் படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர உள்ளிட்ட நான்கு பேரின் கொலைகள் தொடர்பாக தெமட்டகொட சமிந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நம்பிக்கைக்குரிய ஒருவராவார்.
தான் புதைத்த சடலம் யாருடையதென்று தனக்குத் தெரியாது என்றும், அன்று மாலையில் ஹில்டன் விடுதியில் ஒரு விருந்தின் போதே, அது ஒரு இணைய ஊடகவியலாளரினது சடலம் என்று தனது முதலாளி (துமிந்த சில்வா) கூறியதாகவும், அதன்பின்னரே அது பிரகீத்தினுடையது என்று தெரிந்து கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

துமிந்த சில்வாவின் பணிப்பின் பேரில் பல சடலங்களை தான் இவ்வாறு கடலில் வீசியதாகவும் தெமட்டகொட சமிந்த கூறியுள்ளார். சடலங்களை சாக்குப் பைகளில் சுற்றி கனமான கிரனைட் கற்களை கட்டி கடலில் வீசி விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறை சடலங்களை புதைக்கும் போதும், பெரியமுதலாளியின் (கோத்தபாய ராஜபக்ச) உத்தரவின் பேரிலேயே இதைச் செய்வதாக தனது முதலாளி (துமிந்த) கூறுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

“இவர்கள் என்னை எப்படியாவது கொல்லப் போகிறார்கள். நாம் கொலைகளைச் செய்தோம், போதைப்பொருட்களைக் கடத்தினோம்- இது உண்மை. இவை ஒன்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல. முதலாளி எம்மைக் கேட்டுக் கொண்டதால் செய்தோம்.

இந்த விபரங்களை வெளிப்படுத்துங்கள். சிலநாட்களில் என்னை கொன்று விட்டால், இந்த விபரங்கள் புதைக்கப்பட்டு விடும்.“ என்றும் இலங்கைப் பொலிஸ் அதிகாரிகளிடம் தெமட்டகொட சமிந்த கூறியுள்ளதாகவும் ‘லங்கா நியூஸ் வெப்‘ தகவல் வெளியிட்டுள்ளது

Exit mobile version