தோழமைக்கு வணக்கம் !
சவுக்கின் உண்மைத் தன்மையை நீங்கள் ஏன் ஆராயமல் போனீர்கள் என்றும் எனக்கு புரியவில்லை. சவுக்கின் அவதூறுகளுக்கு அந்த வேளையிலேயே எனது விளக்கத்தை மக்களுக்கு எழுதியிருந்தேன். அதை உங்களுக்கும் இணைத்துள்ளேன்…
//
பிடிமானத்தை இழந்த சவுக்கின் சாட்டை !
அதிகாரப் போக்கின் அலட்சியத்தையும் ஊழல் ஊற்றையும் தனது பதிவுகளில் பதிந்த சவுக்கு நியாயமான விசாரிப்புகளை மேற்கொண்டே தனது செய்திகளை எழுதுவதாக இத்தனை நாள் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் என்னைப் பற்றிய மேம்போக்கான தகவல்களை தெரிந்துக் கொண்டு ஓர் பெரும் கற்பனை பொய் கதையை சித்தரித்த பிறகு தான் உணர்கிறேன், சவுக்கின் சாட்டை எதோ காரணத்துக்காக தனது உறுதியான பிடிமானத்தை தளர்த்திக் கொண்டே வருகிறது என்பதை…
உண்மை செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்புவதற்குள் பொய் ஊரைச் சுற்றிவந்துவிடும் என்று தோழர் ஒருவர் சின்ன வயதில் எங்கோ படித்திருந்ததாக முகநூலில் பதிவிட்டிருந்தார். எனக்கு என்னவோ இந்த வரிகளை படித்ததும் சவுக்கின் ஸ்திரத் தன்மைக்கு பொருந்துவதாகவே தெரிந்தது.பொய்யின் புனைவுகளை பல முறை பதிவு செய்வதால் அது உண்மையாகாது என்று சவுக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் உண்மையை விட எனது விடயத்தில் சவுக்கு உருவாக்கிய திட்டமிட்ட பொய்கள் வெகுசீக்கிரமாய் சென்றடைந்துவிட்டது.
இந்த அவதூறுகள் ஏற்படுத்திய மன உளைச்சல்களே சவுக்கின் இந்த பண்பற்ற அநியாயமிகு குற்றச்சாட்டின் புனைவுகளை பற்றி எழுத வைத்துள்ளது.
சவுக்காரே ! முதலில் விகடனை நிராகரித்தேன் என்றீர்கள், அடுத்து நார்வே வேலை கைக்கூடவில்லை தந்தி டிவியின் மக்கள் முன்னாலில் சில காலம் என்றீர்கள் அடுத்து தன்னிச்சையாக இலங்கை சென்று வந்தேன் என்றீர்கள் புலித்தடம் தேடி நூலை வைகோ வெளியிட்டார் அதை நான் விகடனில் சொல்லவில்லை, அதனால் எனக்கும் விகடனுக்கும் முரண் என்றீர்கள், அது மட்டுமில்லாமல் பத்திரிகையாளர் அடையாள அட்டைக்கு ‘குடித்து விட்டு வாகனம் ஓட்டலாம், காவல்துறையில் சென்று பஞ்சாயத்து பேசலாம், ஆசிரியர்களை மிரட்டலாம்’ என்ற விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள், யாரோ ஒருவர் மின்னஞ்சல் அனுப்பினார் அதன் உண்மைத் தன்மையை அவரின் நார்வே நண்பரிடமும் பத்திரிகை நண்பர்களிடமும் விசாரித்தேன் விசாரித்தபொழுது(ஆனால் நீங்கள் விசாரிக்கவில்லை என் நண்பரே தங்களை அழைத்து இது தவறான தகவல் என்ற போதும்) உண்மை என்றே தோன்றுகிறது என்றுள்ளீர்கள், இப்படி ஏராளமான புனைவுகள்…
விகடனில் பணியில் சேரவில்லை, நார்வே செல்லவில்லை,இலங்கை சென்றேன்,தந்தி டிவி மக்கள் முன்னாலில் பணியாற்றினேன் இப்படி ஒரு வெளித்தோற்ற தகவல்களை வைத்தே தங்கள் முழுக் கட்டுரையின் அமைப்பும் அமைந்துள்ளது.
முதலில் ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள் நான் எந்த நிறுவனத்திலும் ஊழியராக சேரவில்லை, சுதந்திர ஊடகவியலாளனாக தான் இருந்தேன். அப்படி இருக்கையில் சிந்தனைகளின் உரிமைகளை யாரிடமும் நான் அடகு வைக்காததால் ‘என்ன செய்ய வேண்டும்’ என்ற சொந்த எண்ணம் எனக்கு உள்ளது. ஆனால் நீங்களோ நான் மக்கள் முன்னாலில் சில காலம் பணியாற்றிய பிறகு தான் இலங்கை சென்றதாக சொல்கிறீர்கள். இது எந்த வகையில் நியாயமானது, தங்களையும் தங்கள் இணையதளத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்ளும் முகமாக அப்பட்டமான ஒரு பொய்யை உற்பத்தி செய்திருக்கிறீர்கள்.
நான் நூலில் குறிப்பிட்டப்படி தமிழருவி மணியன் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான் ஈழத்துக்கு செல்ல வேண்டும் என்கிற சிந்தனை உருவாகியது. ‘புலித்தடம் தேடி’ நூலாக வெளிவரும் நேரத்தில் தான் மக்கள் முன்னால் நிகழ்ச்சி தொடங்கியது என்பதை நீங்கள் யோசிக்காமலே என்னைப்பற்றி நீங்கள் ஆராய்ந்துள்ளீர்கள்.
‘நார்வே நண்பரிடம் காசு வாங்கினேன், புலித்தடம் தேடி புத்தக்கத்தால் வெளிநாடுகளிலிருந்து பணம் கொட்டியது, ஒன்றரை லட்சத்தை எடுத்து கொண்டு இணையதளம் ஆரம்பிக்காமல் ஏமாற்றினார் பிரபாகரன். தவிர ஈழம் ஈழம் என்று அவர் பொங்கினாலும் மனதளவில் அவருக்கு சாதிப்பற்று ரொம்பவே அதிகம் (வன்னியர்)’ என்று அர்த்தமற்ற அவதூறுகளை பரப்பியுள்ளீர்கள்.
புதிய வீச்சோடு பத்திரிகை தர்மத்திற்கு அறமாக சமூகப் பிரச்னைகளையும் அடக்கப்படும் எவ்வின மக்களின் துயரையும் வெளிக்கொண்டு வருவதே எனது இலக்கே தவிர நீங்கள் குறிப்பிடும்படியான மானுட பண்பற்ற வேலைகளில் ஈடுபடுவதல்ல.
சம்பந்தப்பட்ட எனது நண்பரும் சொல்கிறார்,நானும் சொல்கிறேன் இப்படி பணத்தால் எங்களுக்குள் பிரச்னை ஏற்படவில்லை. நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள் என்று சொன்ன பிறகும், நீங்கள் எதோ ஒரு உள் எண்ணத்தோடு மீண்டும் தவறாகவே எழுதியுள்ளீர்கள்.
இதை எல்லாவற்றைவிட மேலாக என்னை சாதி வெறியன் என்று சொல்லியுள்ளதாக எழுதியுள்ளீர்கள். எனக்கு சாதி உணர்வு இருக்கா ? இல்லையா ? என்பதை எனது செயல்பாடுகளில் பார்த்தாலே நீங்கள் புரிந்துக் கொள்ளலாம். ஆனாலும் எனது ஊரை வைத்து நீங்கள் சாதியை கற்பனை செய்து கொண்டுள்ளதை நன்கு எனக்கு புரிகிறது. எனக்கு சாதிப்பற்று உள்ளதென வலிந்து திணித்துள்ளதாக எனக்கு அறிமுகமில்லாத சவுக்கை படித்தவரே என்னிடம் தகவல் தெரிவித்தார். (அதற்கான சான்று இணைக்கப்பட்டுள்ளது). என்னையும் எனது செயற்பாடுகள் குறித்தும் ஆழமாக உணர்ந்துள்ள தோழர்களுக்கு ‘சாதியின் மீதும் அதன் கொடூர பதிவுகளின் மீதும்’ நான் எவ்வளவு பெரிய வெறுப்பைக் கொண்டுள்ளேன் என்பது நன்றாக தெரியும்.
நீங்கள் மக்கள் முன்னாலுக்கு பிறகு இலங்கை சென்றேன் என்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு தகவல் அளித்தவர் மக்கள் முன்னாலில் சீமானோடு முரண் ஏற்பட்டு தான் புதிய தரிசனத்தில் தொடர் எழுத ஆரம்பித்தேன் என்கிறார். எப்படி தான் இப்படியெல்லாம் கற்பனை செய்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.
இப்படி இன்னும் இன்னும் உங்கள் குற்றச்சாட்டில் உள்ள அவதூறுகளை சொல்லிக் கொண்டே போகலாம். புலித்தடம் தேடி நூலை வைகோ வெளியிடவில்லை அதற்கான அறிமுகக் கூட்டத்தில் தான் வைகோ,ஓவியர் புகழேந்தி, இயக்குநர் கெளதமன், மே 17 திருமுருகன் காந்தி (http://bit.ly/1lF0mXK)ஆகியோர் கலந்துக் கொண்டனர். புத்தக வெளியீடு நடந்தது இடிந்தகரையில்(http://bit.ly/1cFO9wW). இந்த வெளிப்படையான அடிப்படை தகவல்களை கூட திரட்டாமல் வெறும் பொய்களை அடுக்கியுள்ளீர்கள்.
//2008ம் ஆண்டு முதல், இந்தியா அளித்த பயிற்சியினாலோ என்னவோ, இலங்கையின் உளவுத்துறை சிறப்பாக வேலை செய்தது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கையாளர்களை போதுமான அளவுக்கு கவனித்தும், கண்காணிப்பிலும் வைத்திருந்தது. இலங்கை அரசு, தமிழ்ப் பத்திரிக்கைகளை கையாண்ட விதம், ஒரு வளர்ந்த நாடுகள் கையாண்டது போல இருந்தது…. ஒரு முறை புலிகள் இயக்கத்தை வளர விட்டதன் காரணமாக 30 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது, மீண்டும் நடக்கக் கூடாது என்பதில் இலங்கை அரசு தெளிவாக இருக்கிறது. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னர், பெரும்பாலான தமிழ் மக்கள், உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, சிங்களர்களோடு சமரசம் செய்து கொண்டு வாழப் பழகி விட்டார்கள்.// இப்படி எதார்த்தை கூறுவது போலாக இலங்கை உளவுத்துறைக்கு புகழாரத்தை சூட்டியுள்ளதோடு ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வுகளை அவமதித்து உள்ளீர்கள்.
‘விசாரனை என்றால் தூங்க விடாமல் தான் விசாரிப்பார்கள். பாய் விரித்து படுக்க வைத்து, தாலாட்டுப் பாடி தூங்க வைக்க இலங்கை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு என்ன மாமியார் வீடா ? ‘ எனக் கேட்டுள்ளீர்கள்.
மிக அருமையான கேள்வி !
போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று நீங்கள் பெரிதும் எதிர்க்காத ஒருவர் கூறிய கொடுமைமிகு கருத்தை இது நினைவில் வரச் செய்கிறது.
தூங்கவிடாமல் தான் விசாரணை செய்வார்கள் என்று நீங்கள் குறிப்பிடுவதே இலங்கை சட்டத்தின் உள்ள அடிப்படை மனித உரிமைகளை கூட கோரக் கூடாது என்ற கருத்தை முன்நிறுத்தவதை பார்க்கிலும் அறமற்ற சிங்களப் படைகளை பல்லக்குகளில் தூக்கிச் சுமக்கும் பணியை மிக சாதுர்யமாக செய்கிறது.
சனல் 4 செய்து விடாததையா தமிழ்ப் பிரபாகரன் செய்து விட போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளமை சமூகப் பிரச்னைகளுக்காக போராடுகின்ற ஒவ்வொரு தமிழ் ஊடகவியலாளனதும் அறம் கொண்ட போராட்டக் குணத்தை சீண்டி பார்ப்பதாகும்.
ஒரு ஊடகவியலாளன் என்கிற முகமூடியை பொருத்திக் கொண்டு பரபரப்புக்காய் பிச்சைக் கேட்கும் ஆக்கப்பூர்வமற்ற உங்கள் நிலைப்பாட்டை இந்த கேள்வி வெளுக்கச் செய்திருக்கிறது. உண்மையை சொல்லப்போனால் மானுட விடுதலைக்காக போராடுகிறவர்களை வரலாறுகள் சரியாக பதிவிட்டுக் கொள்ளுமே தவிர காயப்பட்ட குழம்படிகள் கொண்ட குதிரைகளின் மீதேறி கனைக்கும் வெற்று போலிகளின் தடங்களில் வரலாறுகள் என்றைக்கும் சேராது.
இதெல்லாம் போக எனக்கு தகவல்கள் தரும் நண்பர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டேன் என்கிறீர்கள். பத்திரிகைத் துறையின் சரியான வரலாறுகளை வழிகாட்டிகளாக நோக்கும் என்னைப் போன்றவர்களுக்கு வீசும் போலிச் சவுக்கடிகளின் விசை காகித புலிகளாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒவ்வொருவரின் முகங்களிலும் துரோகத்தின் தழும்புகளை பதித்துச் செல்லும்.
நான் எனது முகபுத்தகத்தில் போட்ட படத்தை ‘இது தான் அவர் வெள்ளை வேனின் முன்பு போஸ் கொடுத்த படம்’ என்று எழுதும் உங்களுக்கும் பார்க்காமலேயே மூன்றாம்தர கிசுகிசு எழுதுபவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றே எண்ணுகிறேன்…
ஒரு நெடும் பயணத்தின் ஆரம்பம் முதல் அடியிலிருந்து இருந்து தான் தொடங்குகிறது என்னும் லோ தட்சூவின் அனுபவமிகு வார்த்தைகளை அப்போது உணர்வீர்கள் !
என் எழுத்தில் உள்ள உண்மைத் தன்மையின் மனசாட்சியின்படி நிமிர்ந்து நிற்பேன், ஏனெனில் நான் எழுதியது சத்தியமான வார்த்தைகள் !//
பொதுஎதிரிக்கு எதிராக திரளாமல் இன்னுமமும் இப்படியே வரும் இளைஞர்களையும் நீங்கள் குறை சொல்லிக்கொண்டிருந்தால்(விமர்சனம் வேறு குறை சொல்தல் வேறு) ‘இளைஞர்களின் பங்களிப்பு தான்’ குறையுமோ ஒழிய வேறு எதுவும் நடந்துவிட போவதில்லை.
நீங்கள் சவுக்கின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தால் இதைப் பற்றி எல்லாம் நான் சொல்லத் தேவை இருக்காது என எண்ணுகிறேன். ஆயினும் ஒரு தோழமையாக இவற்றை உங்களுக்கு எடுத்து வைத்துள்ளேன்.
தோழமையுடன்,
மகா.தமிழ்ப் பிரபாகரன்