Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிக்-பேங் சோதனை முதற்கட்டம் வெற்றி!

10.09.2008.

உலகம் தோன்றியது எப்படி என்பதைக் கண்டறிவதற்காக 80 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஜெனீவாவில் இன்று நடத்திய சோதனையின் முதற்கட்டம் வெற்றி பெற்றுள்ளது.

உலகம் தோன்றியதற்கு முன்பு இருந்தது போன்ற சூழலை செயற்கையாக உருவாக்குவதன் மூலம், விடை தெரியாத பல அறிவியல் கேள்விகளுக்கு (பிக்-பேங் சோதனை-Big Bang test உட்பட) விடை கண்டுபிடிக்கும் முயற்சியில் 10 ஆயிரம் விஞ்ஞானிகள் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டிருந்தனர்.

அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியன் அமைப்பின் (சி.இ.ஆர்.என்) விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சியின் முழு பலனைக் கண்டறியும் சோதனை இன்று நடத்தப்பட்டது. பிரான்ஸ்- சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில் பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருந்த 17 மைல் நீள சுரங்கப் பாதையில் அதி சக்தி வாய்ந்த அணு உமிழும் இயந்திரங்களின் (Hadron Collider) மூலம் அணுக்களை மோதச் செய்து அங்கு புதியதொரு சூழலை உருவாக்குவதே அவர்களின் இலக்கு.

இந்த சோதனைக்கான விஞ்ஞானிகள் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த 30 விஞ்ஞானிகளும் இடம் பெற்றுள்ளனர்.

இன்று காலை 10.36 மணியளவில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் இயந்திரங்களில் இருந்து வெளிப்பட்ட அணுக்கள் சுரங்கப்பாதையின் மொத்த தூரத்தையும் கடந்ததால் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த சோதனை நடத்தப்படுவதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அணுக்களை மோதச் செய்வதால் ஏற்படும் சக்தி மிகவும் கடுமையாக இருக்கும் என்றும், சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பத்தை விட பல மடங்கு அதிக வெப்பம் உருவாகலாம் என்றும், இதன் காரணமாக உலக அழிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும், சோதனை மேற்கொள்ளப்படும் பகுதியில் பிளாக் ஹோல் (Black hole) ஏற்பட்டு, உலகமே அதற்குள் மறைந்து விடும் வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு தரப்பினர் அச்சம் தெரிவித்தனர்.

ஆனால் இதுகுறித்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த சி.இ.ஆர்.என் விஞ்ஞானிகள், சோதனை மிகவும் பாதுகாப்பாக நடத்தப்படும் என்பதால், உலகிற்கும், மக்களுக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படாது எனத் தெரிவித்திருந்ததனர்.

Exit mobile version