24.09.2008.
பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியாக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ‘பிக்-பேங்’ சோதனை சாலையில் ஹீலியம் வாயுகசிந்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கலையடுத்து அடுத்தக்கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டு வசந்த காலத்தின் போதே மீண்டும் நடத்தப்படும் என அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செர்ன் (CERN) இயக்குனர் ராபர்ட் ஐமர் தெரிவிக்கையில், ”ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்தில் ஹீலியம் வாயு கசிந்ததால், பிக்-பேங் ஆய்வுக்காக தயாரிக்கப்பட்ட கருவியின் இயக்கத்தை நிறுத்தும் நிலைக்கு விஞ்ஞானிகள் தள்ளப்பட்டுள்ளனர். இது விஞ்ஞானிகளின் நம்பிக்கையை குலைக்கும் விதமாக அமைந்து விட்டது.
எனினும், இந்த ஆய்வை நடத்த எந்தளவு உத்வேகத்துடன் பிக்-பேங் ஆய்வுக்கு கருவிகளை நிர்மாணித்தோமோ அதே உத்வேகத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள கோளாறையும் விரைவில் சரி செய்து மீண்டும் ஆய்வைத் துவக்குவோம். இதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை” என்றார்.
பிக்-பேங் ஆய்வு : சுமார் 14 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட மிகப்பெரிய அணுமோதலினால் ஏற்பட்ட பெருவெடிப்பின் விளைவாகவே பிரபஞ்சம் தோன்றியது என்ற பிக்-பேங் (பெரு வெடிப்பு) கோட்பாடே இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது. பூமி உருவாகி உயிர்கள் தோன்றவும் இதுவே காரணம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் பிரபஞ்சம் தோன்றியபோது உருவான அணு மோதலை செயற்கையாக உருவாக்கி, அதன் மூலம் பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டறிய 80க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரம் விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர்.
சுமார் 5.95 பில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில் 27 கி.மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையை அமைத்து, அதில் பிங்-பேங் சோதனையை துவக்கினர்.
சுரங்கத்தின் 2 இடங்களில் இருந்து புரோட்டான்களை செலுத்தி நேருக்கு நேர் மோதவிட்டு, அப்போது உருவாகும் மாற்றங்களை ஆயிரக்கணக்கான கருவிகள் மூலம் ஆய்வு செய்து பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டுபிடிக்கதிட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர்.
ஆனால் கடந்த 20ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.57 மணிக்கு பிக்-பேங் சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. குளிரூட்டும் கருவி ஒன்றில் இருந்து ஒரு டன்னிற்கும் மேற்பட்ட திரவ நிலையிலான ஹீலியம் வாயு கசிந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.