Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாலியல் பலாத்காரத்திற்கு மரணதண்டனை வரை

rapeஒரு பெண்ணின் இறப்புக்கு அல்லது நிரந்தர சுயநினைவற்ற நிலைக்கு வழிவகுக்கும் பாலியல் பலாத்காரக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 23- வயது கல்லூரி மாணவி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க நீதிபதி வர்மா குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஓர் அவசரச் சட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் நிறுவனமயமான தாக்குதல் பாதுகாப்புப் படைகளாலும், ஆதிக்க சாதி வெறியர்களாலும், ஏனைய அதிகாரக் கூறுகளாலும் அதிகாரத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் நிலையில் இச்சட்டமூலம் முன்வைக்கப்படுகிறது. அதிகாரத்திற்கான ஆயுதமாகப் பாலியல் வன்முறை பயன்படுத்தப்ப்படுவது குறித்து பேசப்படுவதில்லை.
இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று கூடி விவாதித்தது. அப்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்ய இந்த அவசரச் சட்டம் வழிவகை செய்கிறது. அடுத்ததாக, அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்ய உள்ளது.
இந்த அவசரச் சட்டத்தில், பலாத்காரம் என்ற வார்த்தைக்கான விளக்கத்தை பாலியல் தாக்குதல் என மாற்றுதல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிக்கு தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து அவரது ஆயுள்காலம் வரை என்று மாற்றுதல், ஆசிட் வீசுவதைத் தனிக் குற்றமாக மாற்றி அதற்குக் குறைந்தபட்சம் 10 ஆண்டு முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிப்பது உள்ளிட்ட மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஒரு பெண்ணின் இறப்புக்கு அல்லது நிரந்தர சுயநினைவற்ற நிலைக்கு வழிவகுக்கும் பாலியல் பலாத்காரக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. இதுபோன்ற குற்ற வழக்குகளில் குறைந்தபட்சமாக 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Exit mobile version