Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பார்வதியம்மாளுக்கு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டது போன்ற தோற்றம்.

இலங்கை அரச துணைப்படை அரசியல்வாதியும் சென்னையில் கொலை, கடத்தல், மிரட்டல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு டில்லியில் கிடைத்த வரவேற்பும், இனகொலை குற்றவாளியும் பயங்கவரவாத இலங்கை அரசின் அதிபருமான ராஜபட்சேவுக்கு டில்லியில் வழங்கப்பட்ட மரியாதையும் தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை தோற்று வித்துள்ளது. இது தொடர்பாக பல் வேறு போராட்டங்கள் சிறிய அளவில் நடந்தும் வருகின்றன. டக்ளஸ் தேவானந்தாவை வரவேற்கிற இந்தியா ஏன் எண்பது வயது முதிய பெண்ணான பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியது என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் தமிழகத்தில் இது தொடர்பாக எழுந்துள்ள மனகொதிப்பை அடக்க மத்திய மாநில அரசுகள் பல் வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. அதில் முதலாவது விரைவில் இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா தலையிடப் போகிறது சிறுபான்மை தமிழ் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப் போகிறது என்பது ஒன்று இரண்டாவது பார்வதியம்மாளுக்கு சிகிச்சை தொடர்பானது.பார்வதியம்மாள் சிகிச்சை பெற வந்தவரை திருப்பி அனுப்பி விட்டு மிகக் கொடூரமான மனித உரிமகளை ஏளனம் செய்யும் படியான நிபந்தனைகளை விதித்தது இந்திய அரசு. உண்மையில் கருணாநிதியின் நேரடியான தலையீட்டின் படியும் விருப்பத்தின் படியுமே இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த நிபந்தனைகளைத் தளர்த்தி விட்டதாக இந்தியா அரசு தெரிவித்துள்ளது. இதுவும் கருணாநிதியின் ஏற்பாடுதான். கவிஞர் வாலி, தேவர் சாதித் தலைவர் வாண்டையார், தங்கபாலு ஆகியோர் செம்மொழி மாநாட்டில் தமிழ் குறித்துப் பேசுவதும் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் நிலையில் ஒட்டு மொத்தமாக அறிவுலகினரையும் அதிருப்தியாளர்களையும் சாந்தப்படுத்தும் நோக்கிலேயே இந்த அறீவிப்பு கருணாநிதியின் வேண்டுகோளின் படி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் சிகிச்சை பெற பார்வதி அம்மாளுக்கு சில நிபந்தனைகளின் பேரில் மத்திய அரசு அனுமதி கொடுத்து மே 7-ம் தேதி கடிதம் அனுப்பியது. மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே தமிழகம் வர வேண்டும், மருத்துவமனையில்தான் தங்கவேண்டும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால் தேவையான உதவிகளை தமிழக அரசே செய்ய வேண்டும், எந்த அரசியல் கட்சியினருடனோ குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் பங்கு வைத்திருப்பவர்களுடனோ தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது, பெயர் குறிப்பிடப்பட்ட உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்பவை நிபந்தனைகளாகத் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதன்பிறகு பார்வதி அம்மாள் சென்னை வராமல் இலங்கை சென்றுவிட்டார். அவரின் உடல்நிலை கருதியும், தனது மகளின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற பார்வதி அம்மாள் விரும்புகிறார் என்பதை மனதில் கொண்டும், ஏற்கெனவே விதித்த நிபந்தனையை தளர்த்தி தனது மகளின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கலாமா என்றும், அவரின் உறவினர்களும் நண்பர்களும் அவரைச் சந்திக்க அனுமதிக்கலாமா என்றும் கேட்டு மத்திய அரசு மே 18-ல் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியது. பார்வதி அம்மாள் தனது மகள் இல்லத்தில் சிகிச்சை பெறுவதில் தமிழக அரசுக்கு ஆட்சேபம் இல்லை என்றும், அவரை, அவரது நண்பர்கள் சந்திப்பது பற்றி மத்திய அரசே முடிவு எடுக்கலாம் என்றும் மே 20-ல் தமிழக அரசு பதில் அனுப்பியது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு இலங்கையில் உள்ள இந்திய தூதருக்கும் தமிழக அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. பார்வதி அம்மாள் தனது மகள் இல்லத்தில் தங்கலாம் என்றும், அவரின் நண்பர்களும், உறவினர்களும் சந்திக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அவரைச் சந்திக்க அனுமதி இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பார்வதி அம்மாளின் கருத்து அறிந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் அரசு சொல்லும் மருத்துவமனையில்தான் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்ற நிபந்தனைகள் மட்டும் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் நண்பர்கள் சந்திக்கலாம் அரசியல்வாதிகள் சந்திக்கக் கூடாது என்று நிபந்தனை இப்போதும் உள்ளது. உண்மையில் பிரபாகரனின் நண்பர்கள்? அல்லது பார்வதியம்மாளின் நண்பர்கள் யார்? வைகோ அல்லது வைகோவின் குடும்பத்தினர். நெடுமாறன் அல்லது நெடுமாறன் குடும்பத்தினர் என பார்வதியம்மாள் தமிழகத்தில் இருந்த காலத்தில் இவர்களுடந்தான் பழகி வந்தார். இவர்கள் தமிழகத்தில் அரசியல் தலைவர்களாக இருக்கிற காரணத்தால் பார்வதியம்மாளின் நண்பர்களாக இருக்கக் கூடாதா? என்ன? ஆக நண்பர்களை அரசியல் வாதிகள் என்று தடுக்கவும் முடியும். கருணாநிதிக்கு வேண்டிய அரசியல்வாதிகளை நண்பர்கள் என்று சொல்லிப் போய் பார்வதியம்மாளை சந்திக்க வைக்கவும் முடியும். அதை வருகிற தேர்தலில் ஒரு தம்பட்டமாகவும் அடித்துக் கொள்ள முடியும். கருணாநிதி எது வேண்டுமென்றாலும் செய்வார். எல்லாம் செய்வார். அதுதான் கருணாநிதி.

Exit mobile version