Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாராளுமன்ற உறுப்பினர் பதவியையே திருடுவது தான் திருட்டிலேயே மிகப் பெரிய திருட்டாகும்!!!:அநுரகுமார திஸாநாயக்க.

10.10.2008.

நகை, பணம் போன்றவற்றை கொள்கையடிப்பது சாதாரண திருட்டு. மக்கள் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் பதவியையே திருடுவது தான் திருட்டிலேயே மிகப் பெரிய திருட்டாகும். பாராளுமன்ற பதவியை திருடியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்டங்கள் இல்லை.

அரசியலில் நன்றி மறந்து அகங்காரத்துடனும் தான்தோன்றித்தனமாகவும் செயற்பட்ட பலர் இன்று குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டு கிடக்கும் நிலையில், பிறிதொரு கட்சிக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை திருடி அற்ப சந்தோஷம் காண்பவர்களின் நிலைமையும் வெகு விரைவில் மாற்றமடையுமென ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற, கல்வி அமைச்சின் கீழ் இலங்கை பரீட்சை திணைக்களத்துக்கான குறை நிரப்பு ஒதுக்கீட்டு பிரேரணை மீதான விவாதத்தில் பேசிய அநுரகுமார திஸா நாயக்க எம்.பி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜே.வி.பி.யின் வசந்த சமரசிங்கவின் வெற்றிடத்துக்கு, ஜே.வி.பி.யினால் பிரேரிக்கப்பட்ட ஒருவர் நியமிக்கப்படாமல் அரசாங்கம் பிறிதொருவரை நியமித்துக் கொண்டமை தொடர்பாக சுட்டிக்காட்டி இவ்வாறு கூறினார்.

அத்துடன் மக்கள் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை திருடுவதே திருட்டிலேயே மிகப் பெரிய திருட்டெனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

ஜே.வி.பி.யும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் மூலமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவானது. அன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் நாடு மிகப் பெரிய தனியார் மயமாக்கலை எதிர்நோக்கி வந்ததுடன், போர் நிறுத்த உடன்படிக்கை மூலம் விடுதலைப் புலிகளுக்கு அரசொன்றுக்குரிய சம அந்தஸ்து வழங்கி, நாடு பிளவுபட்டு இலங்கையில் பிறிதொரு தனி இராச்சியம் உருவாகும் ஆபத்தான நிலைமை நிலவியது.

எனவேதான், ரணில் விக்கிரமசிங்கவின் இந்த பயணத்தை நிறுத்தியே ஆக வேண்டுமென்ற நிலைமையொன்று ஏற்பட்டிருந்த சூழ்நிலையிலேயே, ஐக்கிய சுதந்திர முன்னணியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஜே.வி.பி. சுதந்திரக் கட்சியுடன் கைச்சாத்திட்டுக் கொண்டது.

கூட்டணியொன்றை ஏற்படுத்தும் போது 2 ஆவணங்கள் உருவாக்கப்படும். அதாவது கூட்டணி மூலம் உருவாகும் அரசாங்கம் என்ன செய்யப் போகின்றதென்ற வேலைத்திட்டம் ஒன்று மற்றையது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உரிமைகளையும் நலனையும் பாதுகாக்கும் ஒப்பந்தம்.

இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்படுத்தப்பட்ட போது, அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக தயாரிக்கப்பட்டது தான் “ரட்ட பெரட்ட’ (நாட்டை முன்னோக்கி) என்ற வேலைத்திட்டம். அத்துடன் இரு கட்சிகளினதும் உரிமைகளை பாதுகாக்கும் முகமாவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதேநேரம் மூன்றாவது ஆவணமாக மேற்குறித்த உடன்படிக்கையின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட கூட்டணிக்கான யாப்பும் தயாரிக்கப்பட்டது. இந்த 3 ஆவணங்களையும் கொண்டதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.

அன்று 2004 ஆம் ஆண்டு நாடு பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருந்த நிலையில், இந்த நாட்டிலேயே இருந்திராதவர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை கட்டியெழுப்ப அணுவளவேனும் பாடுபடாதவர்களும் வீதியில் இறங்கி போராட்டங்களை செய்திராதவர்களும் இன்று உள்ளே வந்திருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தையே மீறி செயற்படுமளவுக்கு அரசாங்கம் வந்துள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளில் திருப்தி இல்லாததன் காரணமாக கூட்டணியிலிருந்து வெளியேறிய வரலாறு தான் இந்த நாட்டில் இருக்கிறது. கூட்டணியிலுள்ள சம்பந்தப்பட்ட கட்சிகளின் உரிமைகள் இலங்கை அரசியல் வரலாற்றில் மீறப்படவில்லை.

நாமும் அதேபோல் அன்று அரசின் செயற்பாட்டில் திருப்தியின்மையால் அரசிலிருந்து வெளியேறினோம். எனினும், எமது விடயத்தில் கூட்டணியிலுள்ள ஒரு கட்சியின் உரிமை பாதுகாப்பு வரலாற்றில் முதன்முறையாக மீறப்பட்டிருக்கிறது. இது தான் குறைந்தபட்சமாக கடைப்பிடிக்கப்பட்ட ஒழுக்கமாகும். அதை அரசு செய்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் 5 தேசியப் பட்டியல் ஆசனங்கள் ஜே.வி.பி.க்கு உரியதாகும். எனினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கேட்டுக் கொண்டதற்கமைய 5 தேசிய பட்டியல் ஆசனங்கள் நாம் இரண்டை சுதந்திரக் கட்சிக்கு வழங்கினோம். பதவிக்காக அலையும் இன்றைய காலக் கட்டத்தில் இது போன்றதொன்றை இதற்கு முன்னர் எவரும் செய்ததில்லை.

இவ்வாறான சூழ்நிலையிலேயே வசந்த சமரசிங்கவினது வெற்றிடத்துக்கு நாம் ஜே.வி.பி. சார்பில் ஒருவரது பெயரை பிரேரித்து சுசில் பிரேமஜயந்தவுக்கு அனுப்பி வைத்தோம். ஒப்பந்தத்தின் பிரகாரமே நாம் இதை செய்தோம்.

இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் படி தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவர் விலகும் போது அந்த வெற்றிடத்துக்கு விலகுபவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் செயலாளர் பிரேரிக்கும் பெயர் மட்டுமே அந்த வெற்றிடத்துக்கு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென தெளிவாக சுட்டிக் காட்டப்படுகிறது.

இது தொடர்பாக நான் சபையிலும் சுசில் பிரேமஜயந்தவை சந்தித்து பேசியிருக்கிறேன். அதன் போது அவர் “”எவரும் நியமிக்கப்படமாட்டார்கள் என்னை நம்புங்கள்’ என்று என்னிடம் கூறினார்.

ஆனால், இன்று ஒப்பந்தம் முதற்கொண்டு அனைத்தும் மீறப்பட்டிருக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் ஒப்பந்தத்தை மீறி முட்டாள் தனமாக செயற்படுகிறார்கள்.

இந்த பாராளுமன்றத் பதவியை திருடி அற்ப சந்தோஷம் காண்பவர்களின் நிலைமை விரைவில் மாறும். உதவியவர்களை பொருட்படுத்தாமல் செயற்பட்டவர்களுக்கு இந்நாட்டு வரலாற்றில் இடமிருந்ததில்லை. அரசியலில் நன்றி மறந்து அகங்காரத்துடனும், தான்தோன்றித் தனமாகவும் செயற்பட்டவர்கள் குப்பைத் தொட்டிக்குள் தூக்கியெறியப்பட்டிருப்பது வரலாற்றை திரும்பிப் பார்த்தால் புரியும். ஜனநாயக விரோத ஏகாதிபத்தியவாதிகளை தூக்கியெறிய ஜே.வி.பி. ஒரு போதும் தயங்காது’ என்றார்.

Exit mobile version