Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீதான கொலை முயற்சிக்கு கண்டனம் : தமிழ் தேசிய மக்கள் முன்னணி

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீதான கொலை முயற்சிக்கு கண்டனம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை.

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீதான கொலை முயற்சிக்கு கண்டனம் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளுவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது நொச்சியாகம் பகுதியில் உள்ள உதிதாகம பகுதியில் வைத்து அவரது வாகனத்தின் மீது ஆயுததாரிகளால் கைக்குண்டுத் தாக்குதலும் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறீதரன் அவர்கள் தமிழர்களது தாயகம்இ தேசியம்இ சுயநிர்ணய உரிமைஇ தனித்துவமான இறைமை என்ற கொள்கைகளில் உறுதியாக நின்று செயற்பட்டு வருகின்றார். இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகிவருவது பெளத்த சிங்கள பேரினவாத அரசுக்கு எரிச்சலை உண்டு பண்ணியுள்ளது. அதனால் அரசியலில் இருந்து அவரை ஓரங்கட்டும் நோக்கில் சில செயற்பாடுகள் அண்மையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொள்கையில் உறுதியாக இருக்கும் சிறீதரன் அவர்களை இல்லாமல் செய்யும் நோக்கில் அல்லது மிரட்டிப் பணிய வைக்கும் நோக்கிலுமே இக் கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
அரசுக்குத் தெரியாமல் இவ்வாறான ஓர் தாக்குதல் ஒருபோதும் இடம்பெற்றிருக்க முடியாது. இப்படுகொலை முயற்சிக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள படுகொலை முயற்சியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

தொடரும் கொலைகளும் இவ்வாறான படுகொலை முயற்சிகளும் தடுத்து நிறுத்தப்படல் வேண்டுமாயின் இதுவரை காலமும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலை தொடர்பாக ஓர் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் சர்வதேச சட்டப்படி தண்டிக்கப்படல் வேண்டும். இல்லையேல் இவ்வாறான கொலை முயற்சிகள் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எதிராக இடம்பெறுவதனை தடுக்க முடியாது.
-தமிழ் தேசிய மக்கள் முன்னணி-

07-03-2011

Exit mobile version