விலங்குகள் போன்று நடத்தப்பட்ட அகதிகளை இன்று இலங்கை அரசு திருப்பி அழைத்துக்கொள்ளலாம் என்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்துத்துவ எம்.பியான சீனித்தம்பி யோகேஸ்வரன் அகதிகள் இலங்கைக்குத் திரும்புவதற்குச் ஏற்புடைய சூழல் தோன்றியுள்ளது என்கிறார்.
இன்று வரை தென்னிந்தியாவிலுள்ள ஈழத் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட வழங்காமல் சந்ததி சந்தியாக அடிமைகளாக வைத்திருந்ததை தமிழ் நாட்டில் யாரும் எதிர்த்ததில்லை. குறிப்பாக, தமிழ் உணர்வாளர்கள், தமிழ்த் தேசியவாதிகள், தமிழினவாதிகள் என்ற பெயர்களில் உலாவும் எவரும் அகதிகளைத் திரும்பிப்பார்த்தில்லை. தமது கொல்லைபுறத்திலேயே அடிமைகளாக நடத்தப்படும் ஈழத் தமிழர்களுக்காகத் துரும்பைக்கூட நகர்த்தத் துணிவற்ற இக் கும்பல்கள் அகதிகள் நாடு திரும்பக் கூடாது என்றும் திரும்பலாம் என்று தமது பிழைப்பிற்கு ஏற்ப பேசிக்கொள்கின்றனர்.
இந்தியாவில் வாழும் அகதிகளில் பலர் போராளிகள், போராளிகளின் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என்று இலங்கைப் பேரினவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடிய பலர் வாழ்கின்றனர்.
பத்துவருடங்களுக்கு மேல் இந்தியாவில் வாழும் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அவர்கள் திறந்தவெளிச் சிறைகளிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக நடமாட அனுமதிக்கபட வேண்டும். இந்திய மற்றும் தமிழ் நாடு அரசுகளின் மனிதவிரோதச் சிறைகளில் அடைக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அகதிகளுக்கு மேற்குறித்த உரிமைகள் வழங்கப்பட்டு சட்டரீதியாக அவர்கள் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இலங்கைக்குச் செல்வதா இல்லையா என்பதை அவர்களே தீர்மானித்துக்கொள்வார்கள்.
இவை தொடர்பாகவே முதலில் பேசப்பட வேண்டும். தமிழ் உணர்வாளர்கள் என்று கூறிக்கொள்ளும் பிழைப்புவாதக் கும்பல்கள் இது தொடர்பாகப் பேசுவதற்குப் பதிலாக அகதிகளைத் திருப்பியனுப்ப வேண்டுமா இல்லையா எனக் கூச்சலிடுகிறார்கள்.
ஈழப் போராட்டத்தில் நீண்டகாலமாகத் தலையிட்டு சேதப்படுத்தும் சுதர்சன நாச்சியப்பன் 70 சதவீதம் பேர் தங்கள் சொந்த நாட்டுக்கு செல்லவே விருப்புகின்றனர் என்ற போலிப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.
இலங்கையில் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கிவரும் மைத்திரிபாலவின் நிலையற்ற அரசு பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார மேடையாக மட்டுமே தனது அரசை நடத்திவருகிறது. இதுவரை எந்தச் செயற்பாடுகளும் மேற்கொள்ளவில்லை. தேர்தலுக்கு முன்பதாக அகதிகளை இலங்கைக்கு நாடுகட்த்த இலங்கை இந்திய அதிகார வர்க்கங்கள் முயல்கின்றன என்ற சந்தேகங்கள் எழுகின்றன.