Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாம்பிற்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி அரசியல் நடத்த முடியாது:13 ஆவது சட்டத் திருத்தம் குறித்த அரசின் நிலைப்பாடுதான் என்ன?

mano10013 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆளுங்கட்சிகளுக்கிடையிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோர் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்கிறார்கள். ஆனால் அரசுடன் இணைந்திருக்கும் ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ஸ ஆகியோர் அதனைப் பகிரங்கமாக எதிர்க்கின்றார்கள். எனவே இது தொடர்பில் அரசு தனது உறுதியான நிலைப்பாடு என்னவென்று மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு கோரியிருக்கின்றார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.டிபி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவை ஒருபுறமாகவும், ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகியவை இன்னொரு புறமாகவும் 13ஆவது திருத்தம் தொடர்பில் பகிரங்கமாக முரண்பட்டு நிற்கின்றன. அரசின் அரசியல்வாதிகள் மூலமாகவும், ஊடக நண்பர்கள் மூலமாகவும் அரசில் இணைந்துகொள்ள எங்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர், தமது கூட்டணிக்குள் இருக்கும் தேசிய இனப் பிரச்சினை தொடர்பிலான முரண்பாடுகளுக்கு ஜனாதிபதி முடிவுகாணவேண்டும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனும் மாகாணசபைகளுக்கு மேலதிக அதிகாரங்களைக் கோருகின்றார்கள். இது 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்வதாகும். இதை நாங்கள் வரவேற்கின்றோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக இந்தியாவுக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்திருந்தார். இன்று இதை ஜனாதிபதியும் மறந்துவிட்டார். இந்திய அரசும் மறந்துவிட்டது.

ஆளும் தரப்புக்குள்ளேயே முரண்பாடுகள் அதிகம்
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா, தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லவேண்டிய தேவையைப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். சரத் பொன்சேகாவின் இந்தக் கருத்தை அரசின் பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ஸவும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். விமல் வீரவன்ஸ ஒருபடி மேலேபோய் சரத் பொன்சேகாவின் இந்நிலைப்பாடு ஜே.வி.பிக்கு ஏற்புடையதா என்ற மேதாவித்தனமான கேள்வியையும் எழுப்ப, பொது வேட்பாளர் தொடர்பிலே முரண்பாடு ஏற்பட்டுள்ளது எனக் கூறுகின்றார்.ஆனால் உண்மையிலேயே ஆளுகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினுள்ளே இருக்கும் கட்சிகள் மத்தியில்தான் முரண்பாடு பகிரங்கமாக இருக்கின்றது.

தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு என்பது 13வது திருத்தத்திற்கு அப்பால் செல்லப்போகின்றதா இல்லையா என்பது பற்றி ஆளும் கூட்டணியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கவேண்டும். ஜனாதிபதி தேர்தல் நியமனத்திற்கு முன் தெரிவிக்கவேண்டும்.
அரச சார்ந்த தமிழ் அரசியல் வாதிகள் பதில் சொல்லியாக வேண்டும்

தமிழ் மக்கள் சம்பிக்க ரணவக்கவையும், விமல் வீரவன்ஸவையும் கணக்கில் எடுக்கப்போவதில்லை. இவர்களை நாங்கள் அரசியல்வாதிகளாகவே பார்ப்பதில்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தமிழ் மக்களின் வாக்குகளைக் கோருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு இதுதொடர்பில் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள். அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான், பெ.சந்திரசேகரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் ஆதரவு தெரிவிக்கும் தமிழ் அரசியல் தலைவர்களான சித்தார்த்தன், ஆனந்தசங்கரி ஆகியோரது பதில்கள் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்கப்படவேண்டும்.

இன்று போர் முடிவுக்கு வந்துவிட்டது. இனிமேலும் தேசிய இனப்பிரச்சினையை வைத்து எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் அரசியல் சித்துவிளையாட்டு விளையாட முடியாது. பாம்பிற்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி அரசியல் நடத்த முடியாது. தெளிவான அரசியல் காரணங்கள் இல்லாமல் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் தமிழ் மக்கள் கண்களை மூடிக்கொண்டு வாக்களிக்க மாட்டார்கள். ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு இனப்பிரச்சினைக்கான தீர்வை அறிவிப்போம் என்ற பழைய பல்லவியை நம்பி ஏமாறுவதற்குத் தமிழ் மக்கள் இனிமேலும் தயாராகவும் இல்லை. இதுவே இந்நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மலையகம் ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் வாழுகின்ற தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடாகும். இந்த உறுதிப்பாட்டையே நான் எதிரொலிக்கின்றேன். என்று உள்ளது.

Exit mobile version