Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாபர் மசூதி இடிப்பு : நரசிம்ம ராவும் குற்றவாளியே!

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் சுத்தமானவர் என்று லிபரான் கமிஷன் தெரிவித்திருப்பது மிகுந்த அதிருப்தி தருகிறது என்று அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், முஸ்லீம் அமைப்புகள் குறித்து லிபரான் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை என்றும் அது கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாரியத்தின் மூத்த உறுப்பினரான மெளலானா காலித் ரஷீத் பி்ர்னகிமஹால் கூறுகையில், நரசிம்மராவ் சுத்தமானவர், குற்றமற்றவர் என்று லிபரான் கமிஷன் கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.

மேலும், முஸ்லீம் அமைப்புகள் குறித்து சில கருத்துக்களையும் லிபரான் கமிஷன் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது. இதுவும் துரதிர்ஷ்டவசமானது.

பாபர் மசூதி குறித்து முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியமும், பிற அமைப்புகளும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு தரும் பணிகளில் அக்கறை செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார் நீதிபதி லிபரான்.

இப்படி குற்றம் சாட்டுவதற்குப் பதில், முஸ்லீம் சமுதாயத்தினரை தெருவுக்கு வந்து பதிலுக்குப் பதில் போராட்டம், வன்முறை, கலவரத்தில் ஈடுபடாமல் தடுத்ததற்காக எங்களை லிபரான் பாராட்டியிருக்க வேண்டும்.

உண்மையில், முஸ்லீம் சமுதாயத்தினரை கட்டுப்படுத்தி வைத்ததன் மூலம் மிகப் பெரிய வன்முறையை, கலகத்தை நாங்கள் தடுத்துள்ளோம், தவிர்த்துள்ளோம். முஸ்லீம் மக்களை அமைதிப்படுத்துவதற்காகவும், நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் வாரியம் சார்பில் நாடு முழுவதும் ஏராளமான கூட்டங்கள் நடத்தினோம்.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு நடவடிக்கைகளை செய்து தர வேண்டியது அரசின் கடமையாகும். அதேசமயம், எங்களது பொறுப்புகளையும் நாங்கள் தட்டிக் கழிக்கவில்லை. உண்மையில், பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு மட்டுமல்லாமல், இந்துக்களுக்கும் கூட நாங்கள் உதவிகள் செய்துள்ளோம்.

ஆனால் கிட்டத்தட்ட 2000 பேரின் உயிரை வாங்கிய பாபர் மசூதி இடிப்புக் கலவரத்திற்குக் காரணமானவர்களுக்கான தண்டனை என்ன என்பது குறித்து லிபரபான் கமிஷன் பலத்த மெளனம் சாதித்திருப்பது வினோதமாக உள்ளது என்றார் அவர்.

Exit mobile version