பாதுகாப்பு வலயத்தை மீட்பதற்கு முன்னேறிச்சென்ற இராணுவத்தின் 58வது படைப்பிரிவும், 59வது படைப்பிரிவும் இணைக்கப்பட்டு, இடைப்பட்ட பிரதேசங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு வலயத்தின் வடபகுதியிலிருந்து கரையோரப் பகுதியாக முன்னேறிவந்த 58வது படையணி, மறுபக்கத்தில் கரையோரமாக முன்னேறிவந்த 59வது படையணியுடன் இணைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் கடல்மார்க்கமாகத் தப்பிச் செல்வதற்கான வழி அடைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
58வது படையணி தனது மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்து மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 4,300 பேர் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிரேஷ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பத்தினர் எனவும், பல கனிஷ்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்புத் தரப்பு கூறுகிறது.
இதனைவிட, பாதுகாப்பு வலயத்தின் கிழக்கு எல்லையான நந்திக்கடல் பகுதியை நோக்கித் தென்பகுதியாக முன்னேறிவரும் இராணுவத்தின் 53வது படைப்பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை 4,550 பேரை மீட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தினரின் இருபத்தி நான்கு மணித்தியால மீட்பு நடவடிக்கையில் 9,000 பேர் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாரிய தற்கொலைக்கு முயற்சி
இதேவேளை, பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிச் செல்வதற்கான அனைத்துத் தரை மற்றும் கடல் மார்க்கங்களை இராணுவத்தினர் முடக்கியிருப்பதால் விடுதலைப் புலிகள் பாரிய தற்கொலைக்குத் தயாராகிவருவதாக பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் 3.5 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் ஒடுக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது