இந்திய கடற்படையில் ஏற்கனவே ‘விராத்’ என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளது.
கடற்படையை பலப்படுத்தும் வகையில், ரஷியாவிடம் இருந்து விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்றை இந்தியா வாங்கியது. ஏற்கனவே ரஷிய கடற்படையில் ‘கோர்ஸ்கோவ்’ என்ற பெயரில் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்த போர்க்கப்பல், சீரமைக்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரூ.15 ஆயிரம் கோடிக்கு வாங்கப்பட்ட இந்த போர்க்கப்பலுக்கு ‘விக்ரமாதித்யா’ என்று பெயர் சூட்டப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி இந்த போர்க்கப்பலை அப்போதைய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கடற்படையில் சேர்த்தார்.
284 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்ட இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் 3 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு பெரியது ஆகும்.
44 ஆயிரத்து 500 டன் எடையுடன் 22 தளங்களை கொண்ட இந்த போர்க்கப்பலில் 36 போர் விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். இதில் 1,600 கடற்படை வீரர்கள் பணியில் இருப்பார்கள். மேலும் அவர்களுக்கு 45 நாட்களுக்கு தேவையான 16 டன் அரிசி, 20 ஆயிரம் லிட்டர் பால், ஒரு லட்சம் முட்டைகள் உள்ளிட்ட உணவுப்பொருட் களை இதில் சேமித்து வைக்கமுடியும்.
மிதக்கும் நகரம் போன்ற இந்த பிரமாண்டமான போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி கோவாவில் நேற்று நடைபெற்றது.
கோவா கடற்பகுதியிலுள்ள போர்க்கப்பலுக்கு சென்ற பிரதமருக்கு கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். பின் போர்க்கப்பல் குறித்து அதிகாரிகள் பிரதமரிடம் விவரித்தனர். இந்த ஆய்வின்போது, மிக் 29 ரக போர் விமானத்தையும், கடற்படையின் சாகசங்களையும் அவர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வின் போதே பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்யாமல் இந்திய எல்லைக்குள்ளேயே தயாரிக்க வேண்டும் என மோடி தெரிவித்தார். இவ்வாறு சில அதிரடிக் கருத்துக்களைத் தெரிவிக்க அவற்றை ஊடகங்கள் பிரதானப் படுத்திப் பிரசுரிக்க அதிகாரவர்க்க ஆய்வாளர்கள் அலசி அலசி அரசியல் சாம்பார் தயாரிக்க உண்மை மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுவிடும்.
பாதுகாப்புத் துறையில் நேரடி அன்னிய முதலீட்டை அதிகரித்துவிட்டு இந்தியாவிலேயே பாதுகாப்பு உற்பத்தி நடைபெற வேண்டும் என்று மோடி சொல்வது கேலிக்கூத்தானது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பாக இதே அந்நிய முதலீட்டை 26% லிருந்து 100% ஆக உயர்த்த வர்த்த அமைச்சர் ஆனந்த் சர்மா முயன்ற போது, எதிர்க்கட்சியாக இருந்த பாஜக தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது.
மோடி அரசு பொறுப்பேற்ற இரண்டு நாட்களிலேயே வணிக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இதற்கான முயற்சியில் இறங்கி விட்டார். 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் பாதுகாப்புத் துறை சார்ந்த சாதனங்களின் இறக்குமதி குறைந்து, உள்நாட்டு தயாரிப்புகளுக்கு வர்த்தக வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் பா.ஜ.க அரசு கூறுகிறது.
கடந்த ஆண்டு மாத்திரம் இந்தியா 190 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளாக ரஷ்யாதான் இந்தியாவுக்கு அதிக அளவில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வந்தது. இப்போது அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இங்கு ஏற்கெனவே சிக்கோர்ஸ்கி, லாக்கி மார்ட்டின் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. தற்போது அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 100% ஆக உயர்ந்துள்ளதால் பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றின் துணை நிறுவனங்களும் நேரடியாக இங்கு வந்து தொழில் தொடங்க முடியும்.
முன்னர் வெளி நாடுகளில் தயாரிக்கப்பட்ட தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இப்போதோ அதே தளவாடங்களை இந்திய மக்களின் பணத்திலும் மலிவான கூலி உழைப்பிலும் அதே பல்தேசிய வியாபார நிறுவனங்கள் இந்தியாவிலேயே தயாரித்துக் கொள்ளையடித்துச் செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெயர் தான் உள்நாட்டு உற்பத்தி என்று மோடி ஆரம்பிக்க ஊடகங்கள் தொடர்கின்றன.
விழாவில் மேலும் பேசிய மோடி பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என்றார். பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா முன்னேற வேண்டும் என்றார்.
அப்போது, நவீன தொழில்நுட்பங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது நாட்டிற்கு உதவிகரமாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என கூறிய பிரதமர், பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா முன்னேற வேண்டும் என்றார்.