பாதாளக் கோஷ்டிகள் இருக்கும் வரை தேர்தல் வெற்றிகள் தொடர்பில் அரசு கவலைப்படத் தேவையில்லையெனத் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. பாலித ரங்க பண்டார எப்படி பணம் உழைப்பது என்பதே அமைச்சர்களுக்குள்ள தற்போதைய யோசனை என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
தேர்தல் நடவடிக்கைகளுக்காக சிறைகளிலிருந்த பல பாதாளக் கோஷ்டியினருக்கு பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே பாதாளக் கோஷ்டிகள் இருக்கும் வரை தேர்தல் வெற்றி தொடர்பில் அரசு கவலைப்படத் தேவையில்லை.
கம்பஹா மாவட்டத் தலைவராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள பீலிக்ஸ் பெரேரா போன்றவர்கள் தமது தலைமைத்துவ ஆற்றலை விருத்தி செய்யாததாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க பல வேலைத்திட்டங்களை தனது தலையைப் பயன்படுத்தி செய்து முடித்தார். ஆனால் இப்போதுள்ள அமைச்சர்கள் ஆணியடிப்பதற்கே தலையை பயன்படுத்துகின்றனர்.
அத்துடன் எப்படி பணம் உழைக்கலாம் என்பதே அமைச்சர்களின் தற்போதைய யோசனை. இதனால் தமது சகோதரர்கள், உறவினர்கள், நோனாக்களுக்கு பல பொறுப்புகளைக் கொடுக்கின்றனர்.