இவ்வாறு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் நிலைப்பாடு பற்றி அதன் இணை அழைப்பாளர்களான சட்டத்தரணி இ.தம்பையா, டபிள்யூ.சோமரத்ன ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; முதலாளித்துவ தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும் மக்களுக்கு நன்மை தருவதாக இருக்காதெனினும் இலங்கையின் தற்போதைய விசேடமான அரசியல் சூழ்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காது விலகி இருக்கும்படி மக்களிடம் கோரிக்கை விடுப்பது பொருத்தமற்றதாகவே இருக்கும். பாசிச ஆட்சியை நிலைநிறுத்தியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்கு ஒரு நடவடிக்கையாக அல்லது சந்தர்ப்பமாக கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தங்களது வாக்குகளை அவருக்கு எதிராக பயன்படுத்த வேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டால், புதிதாக ஆட்சி அமைக்கும் ஆளும் வர்க்கத்தினருக்கு எதிராகவும் ஜனநாயகத்தை மீட்பதற்காக நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் தேவை இல்லாமல் போகாது. ஜனநாயகத்தை மீட்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பது இன்றியமையாததாகும். அவர் தோற்கடிக்கப்பட்டால் ஆளும் வர்க்கத்தினரின் அரசியல் ஸ்தீரமற்றதாக இருக்கும் சூழ்நிலையில் மக்கள் சார் ஜனநாயகத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவும், மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் ஏற்ற இடைவெளி ஏற்படுமென நம்பலாம். அவரை தோற்கடிக்க முடியவில்லையெனின் மாற்று அரசியல் நடவடிக்கைகள் பற்றி மக்கள் சிந்திக்க வேண்டி வரும்.
அந்த அடிப்படையில் பல அமைப்புக்களினதும் தனிநபர்களினதும் ஒன்றியமான இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், மக்கள் அவர்களது வாக்குரிமையை பௌத்த சிங்கள பாசிச ஆட்சியை நிலைநிறுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுத்துவரும் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான ஆட்சியை தோற்கடிக்க பயன்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கிறது. ஆனால் அவரை தோற்கடிப்பதற்காக பெயர் குறித்து இன்னொரு வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி மக்களை கோருவதா இல்லையா என்பது தொடர்பில் கேந்திரத்தின் அங்கத்துவ அமைப்புக்களிடமும் தனிநபர்களிடமும் கொள்கை ரீதியாக பொது இணக்கப்பாடு ஏற்படாததால் அது குறித்து அந்தந்த அமைப்புக்களினதும், தனிநபர்களினதும் நிலைப்பாடுகளுக்கேற்ப முடிவுகளை அந்தந்த அமைப்பு ரீதியாகவும் தனிநபர்கள் ரீதியாவும் சுதந்திரமாக எடுத்து மக்களுக்கு கோரிக்கை விடுக்கவும் செயற்படவும் முடியுமென தீர்மானிக்கப்பட்டது.
இணை அழைப்பாளர்கள்
இ.தம்பையா
டபிள்யூ. சோமரட்ன
இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்