Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் கைது

Pervez Musharrafபாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கைது செய்யப்பட்டார். இஸ்லாமாத் தில் தங்கியிருந்த பண்ணை வீட்டிலேயே முஷரப் கைது செய்யப்பட்டார்.

நீதிபதிகளை கூட்டாக சிறை வைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் ஜாமீன் மனுவை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் பல ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்துவிட்டு தற்போது தாய்நாட்டில் நடக்கும் தேர்தலில் போட்டியிட நாடு திரும்பியுள்ளார். தேர்தலில் போட்டியிட அவர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் முஷாரப் அதிபராக இருக்கையில் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்திய கையோடு தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி உள்பட 60 நீதிபதிகளை சிறை வைத்தார்.

இது குறித்து வழக்கறிஞர் சவுத்ரி முகமது அஸ்லம் கும்மான் என்பவர் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் முஷாரப் நாடு திரும்பியவுடன் இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி முஷாரப் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சௌகத் அஜீஸ் சித்திக்கி அதை தள்ளுபடி செய்தார். மேலும் அவரை கைது செய்யவும் உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்த முஷாரப் தனது பாதுகாவலர்களுடன் குண்டு துளைக்காத காரில் ஏறி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அவர் பண்ணை வீட்டுக்கு சென்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் முஷாரபை கைது செய்ய அவரது பண்ணை வீட்டுக்கு விரைந்தனர். இந்நிலையில் இன்று காலை அவரை பண்ணை வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். முஷாரப்பின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரது வீட்டை உப சிறையாக அறிவிக்குமாறு போலீசார் அரசை கேட்டுக் கொண்டுள்ளனர். இதை அரசு ஏற்கவுள்ளது.

Exit mobile version